WTA 250: என்னப்பா ரெடியா..! சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி - என்ன விளையாட்டு? எங்கு? எப்போது?
WTA 250 Chennai Open: நடப்பாண்டு இறுதியில் WTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடத்த ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

WTA 250 Chennai Open: WTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் ஒப்புதல் மட்டும் கிடைக்க வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஓபன் டென்னிஸ்:
இந்திய டென்னிஸ் ஜாம்பவானும், தமிழ்நாடு டென்னிஸ் சம்மேளன தலைவருமான விஜய் அமிர்தராஜ், WTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை சென்னையில் நடத்துவதற்கான உரிமம் பெற்றவருடன் (ஆக்டகன்) தமிழ்நாடு டென்னிஸ் சம்மேளனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். சர்வதேச டெஸ்ட் சம்மேளனத்தின் இறுதி ஒப்புதல் மட்டுமே நிலுவையில் உள்ளது எனவும் விஜய் அமிர்தராஜ் விளக்கமளித்துள்ளார்.
WTA 250 டென்னிஸ் போட்டி எங்கு? எப்போது?
மேற்சொன்ன தகவல் உண்மையாகும் பட்சத்தில்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஒரு சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் ஒப்புதலும் கிடைத்தால், வரும் அக்டோபர் கடைசி வாரம் (அக். 27 முதல் நவம்பர் 2 வரை) முதல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மைதானத்தில் WTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படும். அனைத்து ஒப்பந்தங்களும் இறுதியான நிலையில், சர்வதேச சம்மேளனத்தின் ஒப்புதல் என்பது ஒரு சம்பிரதாயமாகவே கருதப்படுகிறது. அதன்காரணமாக நடப்பாண்டு இறுதியில் சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெறுவது உறுதி என்றே கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNTA நூற்றாண்டு கொண்டாட்டம்:
முன்னதாக நடப்பாண்டுWTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழ்நாடு டென்னிஸ் சம்மேளனம் பெற்றிருக்கவில்லை. ஆனால், மாநில சம்மேளனம் தொடங்கப்பட்ட நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதை குறிக்கும் வகையில், இந்த போட்டியை நடப்பாண்டு சென்னையில் நடத்த அமிர்தராஜ் குழுவினர் ஆர்வம் காட்டினர். அதன்படி, நடப்பாண்டு இந்த போட்டியை மெக்சிகோவில் நடத்த உரிமம் பெற்று இருந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதனை சென்னையில் நடத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடர்ந்து சென்னையில் போட்டியை நடத்தவும், தமிழ்நாடு டென்னிஸ் சம்மேளனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மூன்று வாரங்களில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் பங்களிப்பு:
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தமிழ்நாடு அரசு பெரும் பங்களிப்பு அளிக்கும் என அமிர்தராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேறு சில நிறுவனங்களையும் ஸ்பான்சர்களாக இணைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு
சர்வதேச சம்மேளனத்தின் ஒப்புதல் கிடைத்தால், ஸ்பெயினில் உள்ள நடால் அகாடமியில் பயிற்சி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது வீராங்கனையான மாயா ராஜேஸ்வரனுக்கு வைல்ட் கார்டு வழங்குவதற்கான ஆரம்ப திட்டங்களை தமிழ்நாடு டென்னிஸ் சம்மேளனம் கொண்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் நடந்த WTA 125 போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறி மாயா கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
2022 சென்னை ஓபன் டென்னிஸ்
கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு WTA 250 ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதுவும் நீண்ட காத்திருப்பை தொடர்ந்து 2008ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினொரு போட்டி இந்தியாவில் நடைபெற்றது அதுவே முதல்முறையாகும். முடிவில் 2022 இல் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா ஒற்றையர் பட்டத்தை வென்றார். WTA 250 போட்டிகளில் பொதுவாக 32 வீரர்கள் பங்கேற்கும் ஒற்றையர் போட்டியும், 16 அணிகள் பங்கேற்கும் இரட்டையர் போட்டியும் இடம்பெறும்
WTA 250 ஓபன் டென்னிஸ் என்றால் என்ன?
WTA 250 என்பது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளின் ஒரு வகையாகும். கடந்த 2021 இல் அட்டவணை மறுசீரமைக்கப்பட்டதிலிருந்து இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக இந்த நிகழ்வுகள் WTA சர்வதேச போட்டிகளாக வகைப்படுத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தவரிசைக்கான 250 புள்ளிகள் வழங்கப்படும். அதேநேரம், கிராண்ட்ஸ்லாம் போட்டியை ("மேஜர்") வெல்பவர்களுக்கு 2,000 புள்ளிகளும், WTA இறுதிப் போட்டியை வெல்பவர்களுக்கு 1,500 புள்ளிகளும் , WTA 1000 போட்டியை வெல்பவர்களுக்கு 1000 புள்ளிகளும், WTA 500 போட்டியை வெல்பவர்களுக்கு 500 புள்ளிகளும் வழங்கப்படுகிறது.
யார் யார் பங்கேற்கலாம்?
WTA 250 போட்டிகள் WTA சுற்றுப்பயணத்தின் தொடக்க நிலை நிகழ்வுகளாகும், பொதுவாக சில விதிவிலக்குகளுடன், முதல் 30 இடங்களுக்கு வெளியே உள்ள வீரர்கள் இதில் பங்கேற்கலாம். குறிப்பாக,11-30 தரவரிசையில் உள்ள வீரர்கள் நடப்பு சாம்பியனாக இருந்தால், தங்கள் சொந்த நாட்டில் விளையாடினால் அல்லது விலக்குக்கு விண்ணப்பித்திருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். முதல் 10 இடங்களில் உள்ள ஒரு வீரர் மட்டுமே WTA 250 இல் பங்கேற்க முடியும், மேலும் அந்த வீரர் நடப்பு சாம்பியனாகவோ அல்லது சொந்த நாட்டைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
சர்வதேச போட்டிகளின் மையமாகும் சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் திறம்பட நடத்தி சர்வதேச அளவில் தமிழ்நாடு அரசு கவனம் ஈர்த்தது. அதைதொடர்ந்து ஃபார்முலா கார் பந்தயமும் சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது. நடப்பாண்டு இறுதியில் ஜுனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியும், IFCCI 5வது எடிஷன் ஸ்போர்ட்ஸ் டோர்ன்மெண்டும் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அந்த வரிசையில் தான், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியும் இணைந்துள்ளது. இதனால், சென்னை நகரம் சர்வதேச போட்டிகளின் மையமாக உருவெடுத்து வருகிறது.





















