ஓய்வூதியர்களே... திருநங்கைகளே உங்கள் கவனத்திற்கு: தஞ்சை கலெக்டர் கொடுத்த அறிவிப்பு
கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியை தெளிவாகக் குறிப்பிட்டு வரும் 23.06.2025 க்குள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தவறாது இரண்டு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

தஞ்சாவூர்: ஓய்வூதியர்களே உங்கள் கவனத்திற்கு... வரும் ஜூலை 4ம் தேதி குறைதீர் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக குறை தீர்ப்பு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருச்சி மண்டல இணை இயக்குநர் கலந்து கொள்கிறார். அது சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளையும், ஆலோசனைகளையும், நேரில் தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விபரங்கள் பெறலாம்.
இக்கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீர்வு செய்யப்படாத குறைகளை தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியர்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விபரம், செல்லிடைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியை தெளிவாகக் குறிப்பிட்டு வரும் 23.06.2025 திங்கள் கிழமைக்குள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தவறாது இரண்டு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
திருநங்கைகள் கவனத்திற்கு...
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம் திருநங்கைகளுக்கு முழுமையாக சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் திருநங்கைகள் நல வாரியம் 2008 இல் அமைக்கப்பட்டது.
திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து திருநங்கையருக்கு ஒரே இடத்தில் பல்வேறு அடையாள அட்டை வழங்கிட ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து வரும் 24.06.2025 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அடடையில் திருத்தம் வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம். ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் இதற்கான விபரங்களை அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல்களை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.





















