TN Medical College: இல்லாத மாவட்டமே இல்லை..! தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் - எங்கெங்கு தெரியுமா?
TN Medical College: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் புதியதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

TN Medical College: தமிழ்நாட்டின் 6 புதியதாக மருத்துவக் கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களில் அமைய உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள்:
கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அவை அனைத்தும் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகள், 1 எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்), 2 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் அடங்கும். அரசு மருத்துவக் கல்லூரிகள் 5600 எம்பிபிஎஸ் இடங்களை வழங்குகின்றன, அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 6350 எம்பிபிஎஸ் இடங்களை வழங்குகின்றன. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
6 புதிய மருத்துவக் கல்லூரிகள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடங்கிவைத்தபிறகு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க கடந்த ஆண்டே மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைச்சர் கூறியுள்ள தகவலால், புதிய மருத்துவமனைகளுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது.
புதிய உச்சத்தில் தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவில், அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் தான், மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளும் வேகமெடுத்துள்ளன. ஒரு வேளை புதிய கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால், குறிப்பிட்ட 6 மாவட்ட மக்களுக்கும் உயர்தரமான சிகிச்சை மிக எளிதில் கிடைக்கும். அதோடு, மருத்துவ படிப்பிற்கான இடங்களும் குறைந்தபட்சம் 300 இடங்கள் அதிகரிக்கும். இதன் மூலம் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் தமிழக மாணவர்களுக்கு அதிகரிக்கும்.
நிலம் கையகப்படுத்தும் பணிகள்:
தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு மே மாதமே நடைபெற்றது. அதன் முடிவில்மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 3 இடங்களில் முதல் கட்டமாக பணிகளை முடிக்கவும், பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 பகுதிகளில் 2-ம் கட்டமாக பணிகளை முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ‘பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக் ஷா யோஜனா’ என்ற மத்திய அரசின் நிதி பங்கீட்டின் கீழ் இந்த புதிய மருத்துவ கல்லூரிகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டமே இல்லை என்ற சூழலை உருவாக்க அரசு முயன்று வருகிறது.
25 ஏக்கர் நிலம்:
அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு 25 ஏக்கர் நிலத்தை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையான உபகரணங்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய விவரங்களை சேகரிப்பது குறித்தும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்துக்கு கூடுதலாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவருவது குறித்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் இடம் தேர்வு மற்றும் தேவையான இடத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்தும் தயார் நிலையில் வைத்த பின்னர் தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து, தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் 6 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.





















