PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு” அன்புமணி அதிரடி
PMK Anbumani: ராமதாஸின் கருத்துக்கு எதிராக பாமக தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி அறிவித்துள்ளார்.

PMK Anbumani: பாமக தலைவர் பதவியை தன்னிடம் இருந்து பறிக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனம் ராமதாஸுக்கு இல்லை என, அன்புமணி விளக்கமளித்துள்ளார்.
ராமதாஸ் சொன்னது என்ன?
எதிவரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியின் தலைவராக நானே செயல்படுவேன், அந்த பதவியில் இருந்த அன்புமணி இனி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என கடந்த வாரம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். சென்னை வந்திருந்த பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை சந்தித்து, கூட்டணியை இறுதி செய்யும் அன்புமணியின் திட்டத்தை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக ராமதாஸின் முடிவுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கோபமடைந்த ராமதாஸ் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
”ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை”
ராமதாஸின் அறிவிப்பு தொடர்பாக அமைதிகாத்த அன்புமணி, தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்பதையும், தானே தலைவராக தொடர்வதையும் அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது பொழுக்குழு உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவு அன்புமணிக்கே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணி முடிவுகள்:
மேலும், “நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது. 2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும்” என்றும் அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணியையும் தானே இறுதி செய்வேன் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது.
உடையும் பாமக?
வழக்கமாக நிறுவனர் ராமதாஸ் சொல்வதையே பாமக நிர்வாகிகள் வேதவாக்காக பின்பற்றுவார்கள். ஆனால், அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தபோது, பல நிர்வாகிகள் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான், தனது பதவியை பறித்த ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என அன்புமணி அறிவித்துள்ளார். இதனால் பாமகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாமக இரண்டாக உடையுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள சூழலில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம், தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

