மேட்டூர் அணை திறப்பு: தாமதிக்காதீங்க... உடனே இத நடத்துங்க
இந்த ஆண்டும் வரும் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்காக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தாமதமின்றி உடனே குறுவை சாகுபடிக்கான முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படும். இதில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் வரும் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்காக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்கு முன்பாக அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
இதில் வேளாண்மை துறை சார்பில் என்னென்ன புதிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யலாம்? அதன் இலக்கு என்ன? தேவையான வேளாண் கருவிகள் குறித்தும், கூட்டுறவு துறை சார்பில் பயிர் கடன், நகை கடன் வழங்குவது குறித்தும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் இலக்கு, அதற்கு தேவையான கட்டமைப்புகள், சேமிப்பு கிடங்குகள் பற்றியும், நீர்வளத்துறை சார்பில் ஆறு, வாய்க்கால், வடிக்கால்கள் தூர்வாரும் பணி, மின்சார துறை சார்பில் மின் வினியோகம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும்.
இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், அரசு துறையின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவார்கள். இந்த கூட்டமானது காவிரி டெல்டாவின் முதன்மை மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும்.
இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்பார்கள். இந்நிலையில் தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் தொடங்கிய நிலையில் அதற்கான முத்தரப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. முன்னேற்பாடு பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை.
கடந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கான முத்தரப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே இந்த ஆண்டாவது தஞ்சாவூரில் குறுவை சாகுபடிக்கான முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் குறுவைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது சீராக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முத்தரப்பு கூட்டத்தை தற்போது நடத்தினால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். விவசாயிகள் என்னென்ன ரக விதைகளை பயன்படுத்த வேண்டும். புதிய ரகங்கள் என்னென்ன என்பது குறித்து தெரியப்படுத்தினால் தான் அதற்கு ஏற்றாற்போல் விவசாய பணிகளில் ஈடுபட முடியும். புதிய ரக விதைகள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள இயலும். அவற்றின் விலை, விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் போன்றவை குறித்து விளக்கமாக பேசி தீர்வு காண இயலும். இதனால்தான் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மேட்டூர் அணை திறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் உடனடியாக முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





















