Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
தென்காசி அருகே 8 வயது சிறுமியை 10 நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் அச்சம்புதூர் 12வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மனிஷா என்ற 8 வயது சிறுமி இன்று காலை பள்ளி விடுமுறை காரணமாக தனது வீட்டின் முன் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மனிஷாவை அங்கு சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சூழ்ந்துள்ளது.
சிறுமியை கடித்துக் குதறிய 10 நாய்கள்:
உடனே செய்வதறியாது நின்ற சிறுமியை அங்கிருந்த நாய்கள் அனைத்தும் சேர்ந்து கடித்து இழுத்துச் சென்றுள்ளது. அருகே உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்ற சிறுமியை 10க்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கடித்து குதறியதில் சிறுமியின் தலை, கால், தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலி தாங்க முடியாத சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது சிறுமியை தெரு நாய்கள் சூழ்ந்த படி நின்று கடித்து உள்ளது. இதனை கண்ட மக்கள் நாய்களை விரட்டி சிறுமியை மீட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த சிறுமியை இரத்த காயங்களுடன் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்:
தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக இருந்து வரும் நிலையில் அதனைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், கடித்து குதறிய சிறுமிக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கூறுகையில், பல மாதங்களாக அச்சன்புதூரில் நாய்கள் தொல்லைகள் அதிகமாகி கொண்டே வருகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துகிறது, சிறுவர்களை விரட்டுகிறது, இது அதிகமாக நடந்த வண்ணம் உள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் பேரூராட்சியில் பணி செய்யக் கூடடிய பணியாளர்களை நாய் கடித்தது. அது பற்றி அப்போது மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது அதற்கு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் வளர்ப்பு நாய்களை தெருவில் விடாமல் கட்டிப்போட அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள்.
அதன் பின்பும் தெருநாய்கள் கூட்டமாகத்தான் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இனிமேல் குழந்தைகள் தெருக்களில் நடமாட முடியுமா? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எப்போது இதற்கு தீர்வு கிடைக்கும்? நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டாமல் இனிமேல் யாரேனும் பாதிக்கப்படாமல் இருக்க துரித நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.