Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Petrol Diesel Price: இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற, எரிபொருட்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Petrol Diesel Price: இஸ்ரேல் - ஈரான் மோதல் இந்தியாவில் எரிபொருட்களின் விலையை எப்படி பாதிக்கும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மோதல்:
ஈரானின் அணு சக்தி திட்டங்கள் தொடர்பான பகுதிகளில், இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேரடியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தை கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன. மேற்கு ஆசியப் பகுதியிலிருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற கவலைகளுக்கு மத்தியில் எண்ணெய் விலை உயர தொடங்கியுள்ளது. சனிக்கிழமையன்று, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 6 டாலருக்கு மேல் உயர்ந்து, ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாயின் விலை 78 டாலரை கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம்:
கச்சா எண்ணெய் விலை உயர்வானது எரிபொருள் செலவுகள் அதிகரிப்பதற்கும், அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதற்கும் காரணமாகின்றன. இந்தியாவை பொறுத்தவரை ஈரானிடமிருந்து நேரடியாக அதிக அளவில் எண்ணெயை இறக்குமதி செய்வதில்லை. அதேநேரம், நாட்டின் எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவிகிதத்தை இறக்குமதி தான் செய்கிறது. தற்போதைய சூழலில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும், இருநாடுகளுக்கு இடையேயான தாக்குதல் தீவிரமடைந்து நேரடி கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், தேவை அதிகரித்து விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நிலை என்ன?
வடக்கே ஈரானுக்கும் தெற்கே அரேபிய தீபகற்பத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எல்என்ஜி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதமும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கணிசமான பகுதியும் குறுகிய நீர்வழி வழியாகக் கடத்தப்படுவதால், ஒரு முக்கியமான நெருக்கடியான இடமாக இருப்பது இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், இந்தியாவிற்கு முக்கிய விநியோகஸ்தர்களான ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இந்தப் பாதையில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் இந்தியாவின் ஏற்றுமதியை நேரம் மற்றும் செலவுகளின் அடிப்படையில் பாதிக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த காலங்களில், ஈரான் முக்கிய வழித்தடத்தைத் தடுப்பதாக எச்சரித்துள்ளது.
அமைதி சூழல் திரும்புமா?
செங்கடல் போக்குவரத்திற்கான தற்போதைய சரக்குக் கட்டணங்கள் நிலையாக இருந்தாலும், ஈரான் - இஸ்ரேல் இடையேயான அதிகரிக்கும் மோதல்கள் அந்தப் போக்கை மாற்றியமைக்கக்கூடும் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் நீண்டகால தாக்கம், இருநாடுகளுக்கு இடையேயான மோதல் ஒரு பிராந்தியப் போராக விரிவடைகிறதா அல்லது கட்டுப்படுத்தப்படுமா என்பதைப் பொறுத்தது இருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருப்பது, இந்த பிரச்னை உடனடியாக முடிவடையுமா? என்பதில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஒருவேளை அமைதி திரும்பாவிட்டால், ஒரு பீப்பாயின் விலை 130 டலார் வரையிலும் எகிறக்கூடும் என துறைசார் வல்லுர்கள் எச்சரிக்கின்றனர். அதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயரக்கூடும்.
இந்தியாவின் எரிபொருள் தேவை
இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டின் கச்சா எண்ணெய் தேவை 251 மில்லியன் டன். அதில் 12 சதவிகிதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 88 சதவிகிதமான 221 டன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதியில் அதிகபட்சமாக 38 சதவிகிதம் ரஷியாவிடம் சலுகை விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. 2 சதவிகிதம் அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது. மீதமுள்ள 60சதவிகிதம் முழுவதும் அரபு நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியாவின் துறைமுகத்திற்கு வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் மோதலாம் அந்த ஜலசந்தி வழித்தடம் இயங்குவதில் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.





















