Aamir Khan on Pahalgam: பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்களே அல்ல.!! அமீர் கான் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
பஹல்காமில் அப்பாவி சுற்றலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியத என்ன.? பார்க்கலாம்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் அமீர் கானுக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. அதனால், அவர் சில நேரங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் கவனிக்கப்படும். அந்த வகையில், தற்போது, பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அமீர் கான் நடிப்பில் உருவான ‘தாரே ஜமீன் பர்‘ திரைப்படம்
பாலிவுட் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்குபவர் அமீர் கான். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சில முக்கியமான பொது நிகழ்வுகள் குறித்தும் அவர் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு கவனம் பெறுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு அமீர் கான் தானே இயக்கி நடித்த ‘தாரே ஜமீன் பர்‘ திரைப்படம், ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும், அமீர் கானுக்கு இடையேயான பாசப் பிணைப்பை மையமாக வைத்து உருவாகியிருந்தது. இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, ஆஸ்கர் விருது பேட்டிக்கும் சென்றது.
இந்த படத்தின் அடுத்த பாகம் என்றும் சொல்லும் விதமாக தற்போது ‘சிதாரே ஜமீன் பர்‘ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்த படம், வரும் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தனியாகர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமீர் கான், பஹல்காம் தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.
“பயங்கரவாதிகளை நான் இஸ்லாமியராகவே கருதவில்லை“
அந்த பேட்டியின்போது, ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் கொடூரமானது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் நம் நாட்டிற்குள் நுழைந்து சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, அவர்களது கோழைத்தனத்தை மட்டுமே காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், நீங்களோ நானோ கூட அங்கு இருந்திருக்கலாம், நான் சமூக ஊடங்களில் இல்லை, ஆனால் மக்கள் உடனடியாக அந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றுகிறார்கள் என கூறிய அமீர் கான், அந்த தாக்குதல் நடந்த பிறகு, நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது கூட, அந்த தாக்குதல் நம் நாட்டின் மீது மட்டுமல்ல, நமது ஒற்றுமையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என கூறியதாக நினைவுகூர்ந்தார்.
அதேபோல், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் போன்று, ஏற்கனவே நம்மிடமிருந்து பதிலடிகளை பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
ஒவ்வொரு இந்தியரைப்போலவே, தனது இதயத்திலும் நிறைய கோபமும், வலியும் இருந்ததாகவும், தனது தேசபக்தி தனது படைப்புகளில் பிரதிபலிக்கிறது என்றும் அமீர் கான் கூறினார். தன்னைவிட அதிக தேசபக்திப் படங்களை வேறு எந்த நடிகரும் செய்ததாக தான் நினைக்கவில்லை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், எந்த மதமும் மக்களை கொல்லச் சொல்லவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என்றும் அவர் கூறினார். பயங்கரவாதிகளை தான் முஸ்லிம்களாக கருதவில்லை என்றும், எந்த அப்பாவி மனிதனையோ, ஒரு பெண்ணையோ, குழந்தையையோ போரில் கூட தாக்கக் கூடாது என்று இஸ்லாத்தில் எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தீவிரவாதிகளின் செயல் மூலம், அவர்கள் மதத்திற்கு எதிராக செல்கிறார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.






















