Gold Recovered: யப்பா, ஏர் இந்தியா விமான இடிபாடுகள்ல இருந்து இவ்ளோ தங்க நகைகள் மீட்பா.?!! அத என்ன பண்ணாங்க தெரியுமா.?
அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்த இடத்திலிருந்து எவ்வளவு நகைகள், பணம் மீட்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து பார்க்கலாம்.

அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம், கிளம்பிய சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில், ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இந்த நிலையில், விமானத்தின் இடிபாடுகள் சிதறிக் கிடக்கும் இடத்தில், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில், 100 சவரனுக்கும் அதிகமான நககைகளும், பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 சவரன் நககைகள்
அகமதாபாத் விமான விபத்து நடந்த சில நிமிடங்களில், அப்பகுதியைச் சேர்ந்த குழு ஒன்று மீட்புப் பணியில் ஈடுபட்டது. அந்த குழு, அந்த பகுதியில் உள்ள கட்டுமான தொழிலதிபர் ராஜூ படேல் என்பவர் தலைமையிலான குழு என்று கூறப்படுகிறது.
விமானம் கட்டிடத்தின் மேல் விழுந்து நொறுங்கிய நிலையில், உடனடியாக களத்திற்கு வந்த அந்த குழு, விபத்தில் காயம் அடைந்தவர்களை அங்கு இருந்த படுக்கை விரிப்புகள், சேலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
அதோடு, இடிபாடுகளில் இருந்து, சுமார் 100 சவரன் தங்க நகைகளை அவர்கள் மீட்டுள்ளனர். மேலும், 80,000 ரூபாய் பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை உள்ளிட்டவற்றையும் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த நகைகள் ஆவணப்படுத்தப்பட்டு, விபத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களை அழைத்து, அடையாளம் காணப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
விமான விபத்து நடந்தது எப்படி.?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, கடந்த 12-ம் தேதி அன்று, லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலைய வளாகம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரைத் தவிர மற்ற 241 பேரும் உயிரிழந்தனர். மேலும், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு, விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து, இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.





















