சத்தமே இல்லாமல் நடித்து முடித்த கீர்த்தி சுரேஷ்.! நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்!
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், சத்தமே இல்லாமல் நடித்து முடித்த புதிய படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து வழக்கம் போல் பல்வேறு விமர்சனங்களை கடந்தே, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்த முதல் திரைப்படம் 'இது என்ன மாயம்'. இந்த படம் தோல்வியை சந்தித்த போதிலும், இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான, ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
அதே போல் தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மகாநடி' படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இந்த படத்தின் வெற்றி பின்னர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி, தன்னை கதையின் நாயகியாக நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த, பென்குயின், மிஸ் இந்தியா, வசி, ரகுதாதா , சாணி காகிதம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற போதிலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் சத்தமே இல்லாமல் நடித்து முடித்துள்ள புதிய படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தெலுங்கில் ‛உப்பு கப்புரம்பு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சசி என்பவர் இயக்கி முடித்துள்ளார். நடிகர் சுகாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ஜூலை 4 -ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து.






















