பால் டேம்பரிங்கில் சிக்கிய அஸ்வினின் அணி.. இன்று ஆதாரத்தை சமர்ப்பிக்குமா மதுரை? டிஎன்பிஎல்-லில் பரபரப்பு
அஸ்வின் கேப்டனாக உள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இன்று 3 மணிக்குள் ஆதாரத்தை சமர்ப்பிக்க மதுரை அணிக்கு டிஎன்பிஎல் அவகாசம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரி்க்கெட் போல தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் திறமையை கண்டறிவதற்காக தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் நடத்தப்படுகிறது. தற்போது டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பால் டேம்பரிங்கில் அஸ்வின் அணி?
இந்த நிலையில், கடந்த 14ம் தேதி அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய திண்டுக்கல் டிராகன் அணியினர் தங்களுக்கு எதிராக பந்துவீசும்போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இதை பால் டேம்பரிங் என்பார்கள்.
திண்டுக்கல் அணியினர் தாங்கள் பயன்படுத்திய துண்டுகளில் கெமிக்கல் பொருளை பயன்படுத்தி அதை பந்தில் தேய்த்ததாக மதுரை அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தக்க ஆதாரங்களை சமர்ப்பிக்க டிஎன்பிஎல் மதுரை அணிக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆதாரம் சமர்ப்பிக்க உத்தரவு?
இதுதொடர்பாக, டிஎன்பிஎல் சிஇஓ பிரசன்ன கிருஷ்ணன் தெரிவித்த தகவலில், பால் டேம்பரிங் குறித்து எந்த போராட்டமும், எதிர்ப்பும் போட்டியின்போது அதிகாரப்பூர்வமாகவோ, அணிகள் சார்பாகவோ எழுப்பப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. அணியின் உள் விவகாரங்களை வைத்து வெளியாகியுள்ள தகவல்.
அணி நிர்வாகத்திடம் ( மதுரை பேந்தர்ஸ்) தக்க நம்பத்தகுந்த ஆதாரம் இருந்தால் 17ம் தேதி ( இன்று) மதியம் 3 மணிக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வீடியோ, புகைப்படங்கள் மற்றும் பொருட்களாக இருக்கலாம். அதேசமயம், ஆதாரமற்ற அல்லது அவதூறு குற்றச்சாட்டாக இருந்தால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விதிப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
என்ன செய்யப்போகிறது மதுரை?
இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கேப்டனாக ஆடும் அணிக்கு எதிராக பால் டேம்பரிங் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மதுரை அணி இன்று தக்க ஆதாரத்தை சமர்ப்பிக்குமா? அல்லது இந்த விவகாரம் இத்துடன் முற்றுப்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த போட்டியில் முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் அதிரடியால் 13வது ஓவரிலே வெற்றி பெற்று அசத்தியது.
தற்போது இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய அதாவது பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய அவப்பெயரை சந்தித்தது. மேலும், ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.




















