Iran Warns 3 Countries: அமெரிக்காவுக்கு ‘No‘ சொன்ன ஈரான்; 3 நாடுகளை தாக்குவோம் என பகிரங்க எச்சரிக்கை - என்ன செய்வார் ட்ரம்ப்.?
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு நோ சொல்லியுள்ள ஈரான், இஸ்ரேலுக்கு உதவும் 3 நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, போரை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேன் - ஈரான் மோதலால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இனி அமெரிக்காவுடன் பேசுவது அர்த்தமற்றது என தெரிவித்துள்ள ஈரான், இஸ்ரேலுக்கு உதவினால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் பிராந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவது ‘அர்த்தமற்றது‘ - ஈரான்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், அந்நாட்டின் 3 முக்கிய ராணு தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் இந்த தாக்குதல் நடந்திருக்காது என ஈரான் கூறியுள்ளது. இப்படி அமெரிக்காவின் தூண்டுதல்களால் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என ஈரான் தெரிவித்துள்ளது.
என்ன செய்வார் ட்ரம்ப்.?
ஈரானின் குற்றச்சாட்டை மறுத்தபோதிலும், நேற்று பேசிய ட்ரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், இதைவிட பயங்கரமான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தார். ஆனால், இன்று அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையே அர்த்தமற்றது என ஈரான் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ட்ரம்ப் தற்போது என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, இஸ்ரேல் மூலம் ஈரானை ட்ரம்ப் தாக்குவதாக பேசப்படும் நிலையில், அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதலில் இறங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளை எச்சரித்த ஈரான்
இதனிடையே, இஸ்ரேலுக்கு உதவினால் உங்களையும் தாக்குவோம் என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தடுத்தால், பிராந்தியங்களில் உள்ள இம்மூன்று நாடுகளின் கப்பல் மற்றும் ராணுவ முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியுள்ளது.
போரை விரிவுபடுத்த ஈரான் திட்டம்
இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில், வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் எனவும், தங்கள் தாக்குதல் பட்டியலில், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளது.
படைகளை திரட்டும் இஸ்ரேல்
இதனிடையே, ஈரானின் தாக்குதல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் புக தயாராக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஈரானுக்கு எதிராக பெரும் படையை திரட்டும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ ரிசர்வ் படைகள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெகு விரையில், இஸ்ரேலிய போர் விமானங்கள், ஈரானின் ஒவ்வெரு தளத்தையும், ஒவ்வொரு இலக்கையும் தாக்கும் என எச்சரித்துள்ளார்.
ראש הממשלה בנימין נתניהו: "בזמן הקרוב ביותר אתם תראו את מטוסי חיל האוויר של ישראל מעל שמי טהרן - אנחנו נפגע בכל אתר ובכל מטרה של משטר האייתולות." pic.twitter.com/s7nI1EwCXe
— ראש ממשלת ישראל (@IsraeliPM_heb) June 14, 2025
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமாக சூழல்
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள், நேற்று அதிகாலை முதல் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தற்போது தாக்குதல்கள் தீவிமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்ற சில நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல், இஸ்ரேலும் பெரிய அளவிலான போருக்கு தயாராகி வருவதால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.





















