UAE Scientists Invent RCP-Chip: இனி ஆய்வகம் தேவையில்லை, நோய்களை 10 நிமிடத்தில் கண்டறியும் பேப்பர் சிப் - UAE விஞ்ஞானிகள் அசத்தல்
தொற்று நோய்களை கண்டறிய இனி ஆய்வகங்களுக்கு செல்ல தேவையில்லை. ஆம், 10 நிமிடங்களில் நோயை கண்டறியும் பேப்பர் சிப்-ஐ உருவாக்கியுள்ளனர், ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள்.

தொற்று நோய் பரிசோதனையில் ஒரு திருப்புமுனையையும், புரட்சியையும் ஏற்படுத்தும் விதமாக, 10 நிமிடங்களில் தொற்று நோயை கண்டறியும் திறன் கொண்ட பேப்பர் சிப்-ஐ அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக(NYUAD) விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து அசத்தியுள்ளது.
இந்த பேப்பர் சிப்பின் சிறப்பு என்ன.?
இந்த, கதிரியக்கங்களாக பிரிக்கப்பட்ட பேப்பர் சிப்(RCP-Chip) அதாவது, Radially Compartmentalised Paper Chip என்ற காகித அடிப்படையிலான நோய் கண்டறிதல் கருவி, சிக்கலான ஆய்வக உபகரணங்கள் அல்லது பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவையில்லாமல், வேகமான, மலிவு விலையில் மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான நோய் பரிசோதனைக்கு ஒரு பெரிய மாற்றமாக அமையும்.
எப்போது உருவாக்கப்பட்டது.?
இந்த ஆர்சிபி சிப்பானது, கோவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்தபோது, சரியான பரிசோதனை முறைகள் இல்லாமல் உலகம் தவித்துவந்தபோது உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப், தொற்றை விரைவாகவும், விலை குறைவாகவும், எளிமையாக பயன்படுத்தும் வகையிலும், குறிப்பாக ஆய்வகங்கள் இல்லாத பகுதிகளிலும் பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக, அபுதாபி நியூர் யார்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய கருவி தொற்று நோய்களைக் கண்டறிவதற்கான எளிய மற்றும் விரைவான தீர்வை வழங்குகிறது. மேலும், இது குறைந்த எண்ணிக்கையிலான வினையாக்கிகளைப் பயன்படுத்துவதோடு, அதை இயக்க ஒரு சிறிய மாதிரி மட்டுமே தேவைப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த காகித அடிப்படையிலான நோயறிதல் சிப்-ஐ தொலைதூர கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பல்வேறு அமைப்புகளில் எளிதாகப் பயன்படுத்தலாம், மேலும் சுகாதார அணுகலை கணிசமாக மேம்படுத்த முடியும்.
பல நோய்களை கண்டிறியும் வகையில் வடிவமைப்பு
இந்த ஆர்சிபி சிப் கோவிட்-19 தொற்றை கண்டறிய வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் திறன்கள் கொரோனா வைரஸை தாண்டி நீண்டுள்ளன. இந்த சாதனம், சின்னம்மை, டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல நோய்களை கண்டறியும் வகையில் மாற்றியமைக்கக் கூடியது. சிறிய மாற்றங்களுடன், இது பரந்த அளவிலான நோய்களை கண்டறியவும், ஹார்மோன்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களை சோதிக்கவும் இந்த சாதனத்தை மாற்றியமைக்க முடியும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை, பொதுவான தொற்று நோய் சோதனை முதல், நாள்பட்ட சுகாதார நிலைமைகளை கண்காணிப்பது வரை, பல்வேறு மருத்துவத் துறைகளில் பயன்படுத்த முடியும்.
ஆர்சிபி சிப்பின் தனித்துவம்
இந்த ஆர்சிபி சிப்-பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் எடுத்துச் செல்லக்கூடிய தன்மையாகும். அதிநவீன ஆய்வக அமைப்புகள் தேவைப்படும் பாரம்பரிய நோய் கண்டறிதல் சாதனங்களை போல் அல்லாமல், இந்த சிப்-ஐ குறைந்தபட்ச வளங்களுடன் பயன்படுத்த முடியும்.
இதற்கு சுமார் 60 டிகிரி செல்சியஸ் வெப்பமூட்டும் நிலையே தேவைப்படுகிறது. இந்த வெப்பநிலையை, ஒரு சூடான தட்டு அல்லது அடுப்பு போன்ற பொதுவான வீட்டு சாதனங்களின் உதவியுடனேயே எளிதாக அடைய முடியும்.
இதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும், வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு உள்ள பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் இதை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்கிறது.
இதன் மற்றொரு ஒரு சிறப்பம், பாரம்பரிய ரத்த மாதிரிகளுக்க பதிலாக, உமிழ்நீர் மாதிரிகளை இந்த சிப் பயன்படுத்துகிறது. இது, நோயாளிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. மொத்தத்தில், நேரத்தையும், செலவையும் இந்த சிப் குறைப்பதால், மருத்துவத் துறையில் இது ஒரு புரட்சி என்றே கூறலாம்.





















