உலகம் முழுவதும் பள்ளிக்குச் செல்லாத 27.2 கோடி குழந்தைகள்; அதிர்ச்சி ரிப்போர்ட்!
உலகம் முழுவதும் 27.2 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும், பள்ளிக்கு வெளியிலும் இடை நின்று இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு குழுவின் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் 27.2 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும், பள்ளிக்கு வெளியிலும் இடை நின்று இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பொதுவாக பள்ளியில் இருக்கும் 6 முதல் 17 வயதிலான குழந்தைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.
இந்த அதிகரிப்புக்கு 2 காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. முதலாவதாக புதிய சேர்க்கை மற்றும் வருகைப் பதிவேடு 80 லட்சம் பேருக்கு அறிமுகம் செய்யப்பட்டது, இரண்டாவது ஆஃப்கானிஸ்ஹானில் 2021ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது ஆகிய காரணங்கள் கூறப்படுகின்றன.
மக்கள் தொகை மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றம்
உலகளாவிய மக்கள் தொகை மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றம், பள்ளிக்குச் செல்லாதவர்களின் விகிதம் மற்றும் மக்கள்தொகை மதிப்பீடுகளைப் பாதிக்கிறது, ஆனால் அந்த தாக்கத்தின் அளவு, சேர்க்கை மற்றும் வருகை குறித்த தரவுகளின் மூலத்தைப் பொறுத்தே இருக்கும்.
மொத்தத்தில் தொடக்கக் கல்வி மாணவர்கள் 11 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை. அதாவது 7.8 கோடி குழந்தைகள் பள்ளி இடை நின்றவர்களாக அறியப்படுகின்றனர். அதேபோல வளரிளம் பருவத்தினர் இடைநிலைப் பருவத்தைச் சேர்ந்த 15 சதவீதம் மாணவர்கள் பள்ளி செல்வதில்லை. இவர்களின் எண்ணிக்கை 6.4 கோடி ஆகும். அதேபோல, மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களில் 31 சதவீதம் பேர் பள்ளிக்கு வருவதில்லை. இது ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 13 கோடி ஆகும்.
பள்ளி இடைநிற்றல் விகிதமும், குழந்தைகளின் எண்ணிக்கை மீதான தாக்கமும் குறைத்து மதிப்பிடப்படுவதாக, ஆய்வறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கு வெளியே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை 16.5 கோடியாகக் குறைக்கலாம்
2030ஆம் ஆண்டில் நகரங்கள், தங்களுடைய இலக்குகலை அடைந்தால், பள்ளிக்கு வெளியே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை 16.5 கோடியாகக் குறைக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















