ADGP Jayaram: காதல் ஜோடியை பிரிக்க ரூ.25 லட்சம் பேரம் ? யார் இந்த ஜெயராம் ? பின்னணியில் முன்னாள் பெண் போலீஸ்?
ADGP Jayaram History: முன்னாள் பெண் போலீசுடன் இணைந்து, காதல் ஜோடியை பிரிக்க 25 லட்ச ரூபாய் வரை பேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில், கூடுதல் டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயராம் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பெண் போலீசுடன் கூட்டு சேர்ந்து, காதல் ஜோடியை பிரிக்க 25 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
யார் இந்த ஜெயராம் ? ADGP Jayaram Biodata
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயராம் (59). இவர் நேரடி ஐ.பி.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். ஜெயராம், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர், ஆயுதப்படை டி.ஐ.ஜி, மத்திய மண்டல ஐ.ஜி, சென்னை மாநகர போலீஸ் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.
ஜெயராம் தற்போது ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜெயராம் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில்தான், இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
சர்ச்சை போலீஸ் ஜெயராம்
ஜெயராம் எப்போதுமே சர்ச்சையில் சிக்கும் போலீசாகவே இருந்து வருகிறார். குறிப்பாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்தபோது, சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மீது உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோரிடம், பெண் எஸ்.பி புகார் அளிக்க செல்கிறார் என்ற தகவல் அறிந்து, அவரை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்த உத்தரவிட்டதே ஜெயராம் தான் என கூறப்படுகிறது.
அதன் பிறகு அதிகாரம் இல்லாத பதவிகளில், பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது அதிகாரமிக்க பதவிக்கு வந்து விட வேண்டும் என, தொடர்ந்து ஜெயராம் முயற்சி செய்து வந்தார் சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக அஸ்ரா கார்க், பணியாற்றி வந்த போது, ராமாபுரம் பகுதியில் பாலியல் தொழில் நடந்த 'ஸ்பா' ஒன்றுக்கு சீல் வைத்தார். அந்த ஸ்பா ஊழியர்களுடன் ஜெயராம் கேக் வெட்டி கொண்டாடியது, அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
யார் இந்த மகேஸ்வரி ?
கடத்தல் வழக்கில் அவர் சிக்கி இருப்பதற்கு பின்னணியில் மகேஸ்வரி என்ற பெண் முன்னாள் காவலர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஸ்வரி போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்து, காவல் துறையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அவருடன் ஜெயராம் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
காதல் திருமண ஜோடியை பிரிக்க மகேஸ்வரிதான் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஜெயராமுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தருவதாக பேசி முடிக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயராம் காரில் தான் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றிலிருந்து, சிறுவனை ஏற்றிச் சென்று அவரது வீட்டின் அருகே விட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஓட்டலில் புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி மற்றும் மகேஸ்வரி இருந்ததற்கான ஆதாரம் சிக்கி இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















