தஞ்சையில் களைகட்டிய பூ வியாபாரம்... விலை அதிகரித்தாலும் அசராமல் வாங்கிய மக்கள்!
தஞ்சை பூச்சந்தைக்கு ஓசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஆயுதபூஜையை ஒட்டி தஞ்சையில் உள்ள பூச்சந்தையில் மக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. மேலும் ஆயுதபூஜை விழாவையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டு இருந்தது. இருப்பினும் மக்கள் விலை உயர்வை கண்டுக்கொள்ளாமல் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றனர்.
தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை மாநகரில் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோா்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் நேற்று நடந்தது. இன்று காலை முதல் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்களை அழைத்து உற்சாகமாக ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரிகடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் நேற்று முதல் களைக்கட்டத் தொடங்கியது. அதுமட்டுமின்றி வீடுகளில் பூஜை செய்வதுடன், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டினர்.
ஆயுதபூஜையையொட்டி தஞ்சை மாநகரில் பூக்களின் விலை உச்சத்தை தொடத்தது. தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூச்சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக மக்கள் நேற்று முதல் குவிந்தனர். இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ, முல்லைப்பூ தலா ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப்பூ, முல்லைப்பூ தலா ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. ரூ.150-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.300-க்கும், ரூ.150-க்கு விற்ற அரளிப்பூ ரூ.500-க்கும், ரூ.300-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்மங்கி ரூ.400-க்கும், கோழிக்கொண்டை ரூ.100-க்கும், ஆப்பிள்ரோஸ் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர்.
இதனால் பூக்கள் வியாபாரமும் ஜோராக நடைபெற்றது. இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சை பூச்சந்தைக்கு ஓசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பூச்செடிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பூக்கள் வரத்து குறைவாகவே இருக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். நல்ல வருமானமும் எங்களுக்கு கிடைத்தது என்றனர். இதேபோல் இன்று மதியம் வரை வாழைக்கன்று, தோரணம், எலுமிச்சைப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றின் விற்பனையும் அமோகமாக இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், விலை கூடுதலாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதனால் விலையை பற்றி கவலைப்படாமல் ஆண்டு முழுவதும் வருமானம் அளிக்கும் தொழில்கள் மேலும் வளர்ச்சி பெற வேண்டிக் கொண்டு சிறப்பாக கொண்டாடினோம் என்றனர்.