விஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக
விஜய்யின் அரசியல் எண்ட்ரி மற்றும் அவர் பேசிய சில விஷயங்களை வைத்து திமுக, அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கும் என சொல்லி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கினார். அதன்பிறகு அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற குரல் அதிகமாக எழுந்து வருகிறது. அதுவும் 2026 தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்ட நிலையில், திமுக மற்றும் அதிமுகவை கூட்டணி கட்சிகள் நெருக்க ஆரம்பித்துள்ளன.
தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இதுபற்றி விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்ட போது நாங்களும் அப்படித்தான் சொல்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான் என சொல்லியிருக்கிறார். அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும் இந்த தடவை அதிக தொகுதிகளை கேட்க முடிவெடுத்துள்ளது.
மற்றொரு பக்கம் அதிமுகவிலும் இதே பஞ்சாயத்து தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் 50 சீட்டாவது வாங்கிவிட வேண்டும் என பாஜக அதிமுகவை நெருக்குவதாக சொல்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதை காட்டி இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளும் மற்ற தேர்தல்கள் போல் இல்லாமல் 2026 தேர்தலில் தங்களுக்கு தேவையான சீட்டை வாங்கிவிட வேண்டும் என்ற முடிவோடு இருக்கின்றனர்.
அதிகாரத்தில் பங்கு என்பதை நோக்கியே, சீட் ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கின்றன. தங்கள் கட்சியிடம் அதிக MLA-க்கள் இருந்தால் தான் அதிகாரத்தில் பங்கு கேட்க முடியும், அதற்காக அதிக தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என கணக்கு போட்டு கூட்டணி கட்சியினர் திமுக மற்றும் அதிமுகவிடம் பிடிவாதமாக இருக்கின்றனர். புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யே அதிகாரத்தில் பங்கு என பேசிவிட்டார் என அவரை கைகாட்டி கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளார். இப்படி பேசும் விஜய் பதவிக்கு வந்த பிறகு பங்கு கொடுப்பாரா பார்க்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் விஜய்யை வைத்து மூன்றாவதாக ஒரு அணி உருவாவதால், அதனை ஆயுதமாக வைத்தும் அதிக தொகுதிகளை கேட்கும் முடிவில் கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. திமுக, அதிமுகவை தாண்டி ஒரு கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது என ஹிண்ட் கொடுத்து சீட் ஒதுக்கீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர்.





















