ஸ்மார்ட் சிட்டியாக மாறும் காஞ்சிபுரம்.. வீடுதோறும் குடிநீருக்கு மீட்டர் பொருத்தம்.. ரூ.318 கோடியில் திட்டம்
காஞ்சிபுரத்தில் 318 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வீடுதோறும் குடிநீருக்கு மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்க முடிவு.

சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் மிக முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் தற்போது 51 வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில், முறையாக குடிநீர் விநியோகம் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை, தற்போதைய சூழலில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகை
காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தினமும் 23 பில்லியன் லிட்டர் நீர் கிடைப்பதால், சராசரியாக 90 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்க முடிகிறது. இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய விதமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல இடங்களில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் முறையாக குடிநீர் வருவதில்லை என்று குற்றச்சாட்டும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் இந்த பிரச்சனை இருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரிக்க உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் ஆதாரம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல் மற்றும் கோரிக்கை ஆகிய இரு பாலாறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவை போதுமானதாக இருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் மாநகராட்சியாக உருவெடுக்கும். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் தேவை 59 மில்லியன் லிட்டராக இருக்கும் என அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர்.
318 கோடி ரூபாய் மதிப்பீடு
எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு 318 கோடி ரூபாயில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மூன்று குடிநீர் சேகரிப்புக்குணர்கள், 5 ஆழ்துளை கிணறுகள், 6 நீர் உறிஞ்சு கிணறுகள், 431 கிலோமீட்டர் பகிர்மான குழாய்கள், 14 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை தற்போது குடியிருப்பு மற்றும் வணிக ரீதியாக 32,687 குடிநீர் இணைப்புகள். இவை 55 ஆயிரம் குடிநீர் இணைப்புகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 94 குடிநீர் தொட்டிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 14 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
வீடுதோறும் குடிநீர் மீட்டர்
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கி மின்சாரத்திற்கு போல் குடிநீருக்கும் மீட்டர் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தும் நீரின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துப் பணிகளும் முடிந்து 2027க்குள் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















