தஞ்சாவூரில் 156 கிலோ புகையிலை பறிமுதல்: குஜராத் இளைஞர் கைது, பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிக்கு குட்கா பொருட்கள் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தஞ்சாவூர்: வெளிமாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 156 கிலோ புகையிலைப் பொருட்களை தஞ்சாவூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக குஜராத் இளைஞர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக அரசு புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடை செய்துள்ளது. மேலும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை கடத்தி வருபவர்கள் குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிக்கு குட்கா பொருட்கள் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில், பட்டுக்கோட்டை வாகன சோதனை சாவடியில், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனவேந்தன், பட்டுக்கோட்டை தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மகேந்திரா கொகுசு காரை போலீசார் சோதனை செய்ய நிறுத்தினர். ஆனால் போலீசாரை கண்டவுடன் அந்த காரை ஓட்டி வந்தவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அதில் 156 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து குஜராத்தை சேர்ந்த கமலேஷ்(30) என்பவரை கைது செய்தனர்.

இந்த புகையிலைப் பொருட்கள் பெங்களுரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 156 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், புகையிலை பொருட்களை பட்டுக்கோட்டைக்கு கடத்தி வர உறுதுணையாக இருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















