DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK RTE Act: கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்காததால், திமுகவைச் சேர்ந்த கல்வித் தந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DMK RTE Act: கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:
கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், 2021 முதல் 2023ஆம் கல்வி ஆண்டு வரையிலான நிதியை மத்திய அரசு ஒதுக்காததன் காரணமாகவே, ல் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையைத் தொடங்கவில்லை என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளும் மாணவர்களும் பாதிக்கப்படுவதால் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
திமுக கல்வித் தந்தைகள் குமுறல்?
கட்டாய கல்விச் சட்டம் தொடர்பாக நடுநிலையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றொரு கருத்தையும் முன்வைக்கின்றனர். இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களாக அரசியல்வாதிகள் தான இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக திமுகவினர் பெரும் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் 25 சதவிகித இடங்களை அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் ஒதுக்கினால், தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்படக்கூடும். அதனால், இடஒதுக்கீட்டை பெரும்பாலான தனியார் பள்ளிகள் விரும்பவில்லையாம். இந்நிலையில் தான், மத்திய அரசு நிதி அளிக்காத ஒரே காரணத்தால் தான், தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை வெளியிடவில்லை என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டுவதாக கூறப்படுகிறது. 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்காதது, கூடுதல் கட்டணம், பேருந்து கட்டணம் என தனியார் பள்ளி உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் என்பதே பெரும்பாலனவர்களின் கருத்தாகவே உள்ளது. பலருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தரமான கல்விக்கான வாய்ப்பும் பறிபோகும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கட்டாய கல்விச் சட்டம்:
ஆர்டிஇ எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியை அளிக்க வேண்டும். இதில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதன்கீழ் சேரும் ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் செலுத்தும். இந்த நிலையில், ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது, கடந்த 2021 முதல் 2023ம் ஆண்டு வரையிலான நிதி பங்களிப்பை மத்திய அரசு வழங்காவிட்டாலும், தமிழ்நாடு அரசே மொத்த செலவையும் ஏற்று கட்டணத்தை செலுத்தியது.
ஆனால், தற்போது நிதிநிலை சரியில்லாததால் தங்களால் முழு பங்களிப்பையும் அளிக்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக, மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது. அதன் முடிவிலேயே தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















