AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் 64 ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

AK 64
அஜித்தின் 63 ஆவது படமாக உருவான குட் பேட் அக்லி கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது . ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி த்ரிஷா , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு பிரபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்தது. இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான படமாக அமைந்தாலும் வெகுஜன சினிமா ரசிகர்கள் என்னமோ படத்தைப் பார்த்து தலைவலி வந்து திரும்பியது தான் மிச்சம்.
அடிப்படையாக ஒரு ஒன்லைனை வைத்துக் கொண்டு திரைக்கதையில் எந்த வித மெனக்கெடலும் இல்லாமல் வெறும் ஹைப் கொடுத்தே ஓடிய படம் குட் பேட் அக்லி. படத்திற்கு ஏற்றதுபோல மூளைக்கு சுத்தமாக வேலை கொடுக்க விரும்பாத ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தார்கள். அடுத்தடுத்து அஜித்தின் முந்தைய பட ரெஃபரன்ஸ் , பழைய பாடல்கள் , காதை கிழிக்கும் பின்னணி இசை , என இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடியதைப் பார்த்து இதுதான் சினிமாவின் எதிர்காலமா என்று விவாதிக்க தொடங்கிவிட்டார்கள். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் 64 ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவலைக் கேட்ட சினிமா ரசிகர்கள் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
கார் ரேஸிங்கில் அஜித் குமார்
குட் பேட் அக்லி படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் சிறிது காலம் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்திருக்கிறார். தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் GT4 சீரிஸ் கார் பந்தையங்களில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரேஸிங் பக்கம் அஜித் திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அஜித்திற்கு உலகம் முழுவதிலும் கிடைத்துள்ள வரவேற்பு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதும் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அஜித் வழிநடத்தும் அஜித் குமார் ரேஸிங் அணிக்கும் சர்வதேச அளவில் பெரிய கவனம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் வரை அஜித் முழுக்க முழுக்க கார் பந்தையத்தில் கவனம் செலுத்த இருக்கிறார்.





















