(Source: ECI | ABP NEWS)
தமிழக அரசுக்கு உடனே நிதி ஒதுக்குங்க; மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்- எதற்கு?
ஆர்டிஇ எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்டிஇ எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்டிஇ எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியை அளிக்க வேண்டும். இதில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் செலுத்திவிடும்
இதன்கீழ் சேரும் மாணவர்களுக்கான கல்வித் தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்திவிடும். மத்திய அரசு 60 சதவீத தொகையையும் மாநில அரசு 40 சதவீத தொகையையும் அளிக்கும்.
இந்த நிலையில், ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மாணவர் சேர்க்கையைத் தொடங்காதது ஏன்?
இதற்கு பதிளித்த மாநில அரசு, 2021 முதல் 23ஆம் கல்வி ஆண்டு வரையிலான நிதியை, மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கவில்லை என்று பதில் அளித்தது. இதனால் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையைத் தொடங்கவில்லை என்று மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளும் மாணவர்களும் பாதிக்கப்படுவதால் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உரிய முறையில் ஒதுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.






















