”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Musk
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலக பணக்காரர் மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டது, உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மஸ்க்குடனான சமாதானத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறிய ட்ரம்ப், தற்போது தன் நிலையை மாற்றியுள்ளதுபோல் தெரிகிறது.
மஸ்க் - ட்ரம்ப் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து, சமூக வலைதளத்தில் மாறி மாறி பதிவுகளை போட்டு வந்தனர். இந்த சூழலில், ட்ரம்ப்பிற்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு ஒரு பதிவை போட்டார் மஸ்க். அதில், உண்மையிலேயே பெரிய குண்டு ஒன்றை போட வேண்டிய நேரமிது என்று குறிப்பிட்டு, எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்ப்பின் பெயர் உள்ளது என மஸ்க் குறிப்பிட்டிருந்தார். அந்த கோப்புகள் பொதுவெளியில் வராததற்கு அது தான் உண்மையான காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவின் கமெண்ட்டில், இந்த பதிவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், உண்மை வெளியே வரும் என்றும் மஸ்க்கே பதிவிட்டிருந்தார். மேலும், ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஜே.டி. வான்ஸ் பதவியேற்க வேண்டும் என்று வந்த ஒரு கமெண்ட்டை மேற்கோள் காட்டி, ஆமாம் என கூறியிருந்தார் மஸ்க். அதைத் தொடர்ந்து, மஸ்க்கின் பதிவு உலக அளவில் பேசுபொருளானது.
எப்ஸ்டீன் யார் என்று மக்கள் தேட ஆரம்பித்தனர். இதனால் கோபமடைந்த ட்ரம்ப், மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கான அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டினார். இப்படிப்பட்ட சூழலில், திடீரென ட்ரம்ப் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதாக தான் போட்ட பதிவை சமீபத்தில் நீக்கினார் எலான் மஸ்க்.
அதனால், இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், ஏற்கனவே மஸ்க்குடன் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்த ட்ரம்ப், தற்போது பேசுவதில் தனக்கு பிரச்னை இல்லை என்று கூறியிருப்பது, இருவருக்குமிடையேயான மோதல் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.





















