சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி
தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
கடலூர் அருகே எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 50), இவர் நேற்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். புகாரில், எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். எனது மூத்த மகன் அஜித்குமாரும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்த கோகுல் என்பவரும் ஒரே பள்ளியில் படித்ததால் நண்பர்களாக பழகி வந்தனர்.
கோகுல், கடந்த 2 வருடங்களுக்கு முன் அஜித்குமாருக்கு போன் செய்து, எனது அப்பா பாஸ்கரன் மூலம் தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாங்கி தருகிறேன் என கூறினார். அதை எனது மகன் மறுத்துவிட்டதால் என்னை தொடர்பு கொண்ட பாஸ்கரன், நான் ரயில்வேயில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். எனது மனைவி அனுசுயாவுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளவர்களை நன்கு தெரியும். என்னை நம்பி வேலைக்கு பணம் கொடுங்கள். கோகுலுக்கும் அரசு வேலை வாங்குவதற்காக ரூ.6 லட்சம் கட்டியுள்ளேன். உங்கள் மகனுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என்றார்.
வேலை வந்துவிடும், இல்லாவிட்டால் ஒரு மாதத்தில் பணத்தை தந்து விடுகிறோம்
அவர் கூறியதை நம்பி ரூ.6 லட்சத்தை பாஸ்கரன் வீட்டில் வைத்து கொடுத்தேன். அதற்கு பிறகு எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. பாஸ்கரனை தொடர்பு கொண்டபோது, வேலை வந்துவிடும், இல்லாவிட்டால் ஒரு மாதத்தில் பணத்தை தந்து விடுகிறோம் என்றார். பின்னர் ரூ.1 லட்சம் கொடுத்தார். மீதி பணத்தை தரவில்லை. பாஸ்கரன் குறித்து விசாரித்தபோது, குணசேகர் என்பவரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.14 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றியுள்ளார்.
மீதி பணம் கேட்டதால் கொலை மிரட்டல்
அவருக்கு ரூ.1.50 லட்சம் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியுடன் எனது மீதி பணம் ரூ.5 லட்சத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறியிருந்தார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டதன் பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி பாஸ்கரன் (60), அவரது மனைவி அனுசுயா (56) ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















