உயிரிழந்த தலைமை காவலர்.. சக காவலர்கள் சேர்ந்து செய்த உதவி - கரூரில் நெகிழ்ச்சி
உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் 5668 பேர் ஒன்றிணைந்து தாங்களாக மனமுவந்து தலா 500 ரூபாய் வீதம் 28,34,000 ரூபாய் சேர்த்தனர்.

கரூரில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் 5668 பேர் இணைந்து 28,34,000 ரூபாய் வழங்கி உதவினர்.
தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார்.
அவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உயிரிழந்த பிரகாஷின் மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரம், படிப்பு, திருமணம், மருத்துவ செலவு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதவும் எண்ணத்துடன் 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் காவலர்கள் 5668 பேர் ஒன்றிணைந்து தாங்களாக மனமுவந்து தலா 500 ரூபாய் வீதம் 28,34,000 ரூபாய் சேர்த்தனர்.
இதில் அவரது மகன் மற்றும் மகள் பெயரில் தலா 10 லட்சம் ரூபாய் 10 ஆண்டிற்கு நிரந்தர வைப்பு திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த தொகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு தலா 19,82,020 ரூபாய் கிடைக்கும். பிரகாஷின் மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கில் 8,63,000 ரூபாய் செலுத்தப்பட்டதுடன் அவர்களது குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு ஒரு ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி அதற்கான ஆவணங்களை கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சக போலீசார் பிரகாஷின் குடும்பத்திற்கு வழங்கினர்.
2003ம் ஆண்டு காவலர்கள் நண்பர்கள் உதவும் கரங்கள் மூலமாக தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்த 70 காவலர்களின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

