IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி சுழல் தாக்குதல் நடத்தி வருகிறது. வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஷர் படேல் மாறி, மாறி வீசி வருகின்றனர்.

IND vs AUS Champions Trophy 2025 Semi Final: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக செல்லப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன.
இந்தியா - ஆஸ்திரேலியா:
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்காக அனுபவ வீரர் ஹெட்டுடன் இளம் வீரர் கூப்பர் கானோலி தொடங்கினார். தடுமாற்றத்துடன் ஆடிய கூப்பர் கானோலி 9 பந்துகளில் ரன் எதும் எடுக்காமல் ஷமி பந்தில் அவுட்டானார்.
சுழல் தாக்குதல்:
அடுத்து ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரி, சிக்ஸர் என விளாச ஆஸ்திரேலிய ரன் ஏறியது. இதனால், ஆட்டத்தின் 6வது ஓவரிலே குல்தீப் யாதவை அழைத்தார் ரோகித் சர்மா. இந்த மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் சுழல் தாக்குதலை ரோகித் தொடர்ந்து நடத்தினார்.
அவரது முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்தது. கடந்த போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் ஓவரிேல அதிரடி காட்டிய ஹெட் அவுட்டானார். அவர் சிக்ஸருக்கு அடிக்க முயன்ற பந்தை சுப்மன்கில் கேட்ச் பிடித்தார். அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்:
இதன்பின்பு, ஸ்மித் - லபுஷேனே ஜோடி சேர்ந்தது. ஆஸ்திரேலியாவை தடுமாற வைக்கும் விதமாக குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோரை மாறி, மாறி வீச வைத்து வருகிறார் ரோகித் சர்மா. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்கு இந்திய அணி ஆளாக்கினர்.
இந்தியாவின் சுழல் தாக்குதலுக்கு பலன் அளிக்கும் விதமாக ஜடேஜா சுழலில் லபுஷேனே அவுட்டானார். அவர் 36 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்களில் அவுட்டானார். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடிய சதம் அடித்த இங்கிலிஷை 11 ரன்னில் ஜடேஜா அவுட்டாக்கினார். தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டை இழந்து 144 ரன்களுடன் ஆடி வருகிறது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 36 ரன்களுடனும், இங்கிலீஷிம் ஆடி வருகின்றனர்.
வெற்றியைத் தீர்மானிக்கும் பந்துவீச்சு:
ஆஸ்திரேலிய அணிக்காக அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் ஆகியோர் வெளியில் உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா ஆகிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் அக்ஷர்படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர்களாக களமிறங்கியுள்ளனர். பேட்டிங்கில் ரோகித்சர்மா, சுப்மன்கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் பிரதானமாக உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியில் இன்றைய போட்டியில் பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஜம்பா, தன்வீர் சங்கா ஆகியோர் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இவர்களுடன் மேக்ஸ்வெல், லபுஷேனேவும் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

