ஆட்சியர் ஐயா..! மருத்துவமனையில் இவ்வளவு குறைகள் இருக்கு.. சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையினை பொறுப்பேற்ற 24 மணிநேரத்தில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் சென்று திடீர் பார்வையிட்டு, மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.
களத்தில் இறங்கிய புதிய ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றைய தினம், மயிலாடுதுறையின் நான்காவது மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தான் பொறுப்பேற்ற 24 மணிநேரத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தனது ஆய்வை தொடங்கியுள்ளார். அதன் ஒன்றாக இன்று முற்பகல் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனை முழுவதும் ஆய்வு
தொடர்ந்து அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், குடிநீர் வசதிகள், கழிவறை உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும், தினசரி புறநோயாளிகள் வருகை பதிவேடுகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை பதிவேடுகள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், புறநோயாளிகள் பிரிவகத்தில் வருகை தந்த பொதுமக்களிடம் முறையாக சிகிச்சைகள் வழங்கப்படுகின்றதா? என்பதனை கேட்டறிந்தார். மேலும், மருந்து இருப்பு மற்றும் மருந்து விவரங்களை சுகாதார துறை இணை இயக்குநரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார். இவ்வாய்வின்போது, சுகாதார துறை இணை இயக்குநர் மரு.மருதவாணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாயில் வானுயர கட்டிடங்கள், பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள், நேர்த்தியான அறைகள், வசதியான படுக்கைகள் என சகல வசதிகளும் உள்ளன. ஆனால் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் பணியிடம் சுமார் 42 பேர் இருக்க வேண்டும். ஆனால் 20 பேர் தான் இருக்கிறார்கள். மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்திய தால் தற்போது 96 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டுமாம். ஆனால் அதை நோக்கி எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
மருத்துவமனையில் உள்ள பிரச்சினைகள்
அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அறவே இல்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது யாரோ ஒருவர் டெபுடேஷனில் வந்து செல்கிறார் போல. இரவில் எமர்ஜென்சி பார்க்க மருத்துவர்கள் இல்லை. சீரியஸ் கேஸ்கள் வழக்கம் போல தஞ்சை, திருவாரூர் மற்றும் திருச்சிக்கு தான் அனுப்பபடுகின்றனர். இதற்கு ஏன் இங்கு கோடி கணக்கில் செலவு செய்து ஒரு மருத்துவமனை? தமிழ்நாட்டிலேயே ஒரு தலைமை மருத்துவமனை ஒரு தனியார் மருத்துவ கிளினிக் போல இயங்குவது மயிலாடுதுறையில் தான். காய்ச்சல், தலைவலி, கால்வலி இதை தான் இப்போது பார்க்க மருத்துவர்கள் உள்ளனர். ஒரு மருத்துவர் 3 ஷிப்ட் வேலை பார்க்க வேண்டி உள்ளது. மருத்துவர்களுக்கு ஓய்வு கிடையாது. சீர்காழி, பொறையார், வைத்தீஸ்வரன் கோயில் என பல அரசு மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தான் மருத்துவர்கள் நியமிக்கப் பட்டு, அவர்களும் பணியை விட்டு வெளியேறும் நிலையில் தான் உள்ளனர்.

பயனற்று கிடக்கும் பலகோடி ரூபாய் எம்.ஆர்.ஐ ஸ்கேன்
பல கோடி ரூபாயில் ஒரு எம்.ஆர். ஐ. ஸ்கேனை வாங்கி போட்டு விட்டு, ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு ரேடியாலஜிஸ்ட் டை பணியில் அமர்த்த வழி இல்லை இங்குள்ள அதிகாரம் படைத்தவர்களுக்கு. அரசிடம் சண்டை போட்டு மருத்துவர்களை கொண்டு வர முடியவில்லை மயிலாடுதுறை எம்.எல்.ஏ வுக்கும், திமுக மாவட்ட செயலாளருக்கும். இந்த அழகில் நம் மாவட்டத்துக்கு ஒரு பொறுப்பு அமைச்சர் வேறு என அதங்கத்தை வெளிப்படுத்திய சமூக ஆர்வலர்கள் தற்போது ஆட்சியர் பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் ஆய்வுடன் நின்றுவிடாமல் மேலே குறிப்பிட்ட குறைகளை களைய வழி வகை செய்யவேண்டும் என்பதே எங்களது விருப்பங்கள்" என தெரிவித்துள்ளனர்.






















