TN 12th Exam 2025: உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி- உறுதியோடு தேர்வெழுதச்சென்ற பிளஸ் 2 மாணவன்!
Tamil Nadu 12th Exam 2025: நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருந்த தன் தாயின் காலைத் தொட்டு, ஆசி பெற்ற சுனில் குமார், தேர்வை எழுத பள்ளிக்குச் சென்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுத்தேர்வு நாளில் தாய் உயிரிழந்த நிலையிலும், பிளஸ் 2 மாணவன் தேர்வு எழுதச் சென்ற நிகழ்வு, கண்டோர், கேட்டோர் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 3) தொடங்கி நடைபெற்றது. சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வு நடந்த நிலையில், 11 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை.
கல்வியே ஆயுதம்
எனினும் தமிழகம் முழுவதும் கல்வியை முக்கியமாகக் கருதிய மாணவர்கள், தேர்வெழுதிய நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இதில் முக்கியமானவர் சுனில் குமார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதி அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இத்தம்பதிக்கு சுனில்குமார் என்ற மகனும் யுவாஷினி என்ற மகளும் உள்ளனர்.
சுபலட்சுமிக்கு இதய நோய்
கிருஷ்ணமூர்த்தி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதற்கிடையே சுபலட்சுமிக்கு இதய நோய் கண்டறியப்பட்டது. உடல்நிலை சரியில்லாமலே சுபலட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். சுபலட்சுமி மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இதற்கிடையே சுபலட்சுமி திடீரென நேற்று அதிகாலை உயிரிழந்தார். எனினும் பொது தேர்வு தொடங்கியதால் தனது தாய் இறந்த சோகத்தையும் தாண்டி, பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்தார்.
தாயின் காலைத் தொட்டு ஆசி பெற்ற மகன்
நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருந்த தன் தாயின் காலைத் தொட்டு, ஆசி பெற்ற சுனில் குமார், தேர்வை எழுத பள்ளிக்குச் சென்றார். தேர்வு முடித்து, மதியம் வீடு திரும்பியவர், தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு கண்டோரையும் கேள்விப்பட்டோரையும் நெகிழவும் கண் கலங்கவும் வைத்தது.






















