Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடி
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மும்மொழிக்கொள்கையை கடுமையாக எதிர்ப்பதால் அவரை சீண்டும் வகையில், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மும்மொழியில் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிசைக்கு அவரது பாணியிலேயே முதல்வர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் உட்பட பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்திர ராஜன் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில் மும்மொழியில் வாழ்த்துகிறேன்… என குறிப்பிட்டுஅதில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்து இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்தி இடம்பெறவில்லை.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மும்மொழிக்கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதுகுறித்து ஆலோசிக்க வரும் மார்ச் 5 அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளார். இந்நிலையில் அவரை சீண்டும் வகையிலேயே தமிழிசை இந்த பதிவை போட்டிருந்தார். குறிப்பாக இந்தியை திணிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவும் முதல்வர் ஸ்டாலின் தெலுங்கர் என்பதை கிண்டலடிக்கும் விதமாகவும் தமிழிசை இதுபோல் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம். பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம்.
தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
ஒருவர் விரும்பும் எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள். அறிவியலை புறக்கணிக்கும் பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பை கட்டாயமாக்குகின்றனர்.
ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பயனளிக்கும். தெலங்கானா ஆளுநராக இருந்ததால்தான் தமிழிசை தெலுங்கு கற்றுள்ளார். அதனால் தெலுங்கு மொழியில் வாழ்த்தியுள்ளார். தமிழிசை பள்ளி பருவத்திலேயே தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. தெலங்கானா ஆளுநராக பணியாற்றியதால் தெலுங்கு பழகி உள்ளார். ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டாம். தேவைக்காக கற்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தமிழிசை உறுதி படுத்தியுள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில் தெலுங்கு இடம் பெற்றிருக்கிறது. இந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டு உணர்வின் வெளிப்பாடு.
கோட்சே வழியை பின்பற்றும் இயக்கத்தினர் ஒருபோதும் காந்தியின் நோக்கத்தை நிறைவேற்ற மாட்டார்கள்” எனத் பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.





















