David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? சம்பளம் எவ்வளவு?
David Warner: பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரராக இவர் இருந்தாலும் ஐபிஎல் தொடரில் ஆடத் தொடங்கிய பிறகு இவருக்கு என்று இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர்.
தெலுங்கு படத்தில் டேவிட் வார்னர்:
ஐதரபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடத் தொடங்கிய பிறகு டேவிட் வார்னர் பிரபல தெலுங்கு படங்களான பாகுபலி, புஷ்பா போன்ற படங்களின் கெட்டப்புகளில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க வைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில், தெலுங்கு படத்தில் டேவிட் வார்னர் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிதின். இவரது நடிப்பில் தற்போது ராபின்ஹுட் என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில்தான் டேவிட் வார்னர் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு டேவிட் வார்னருக்கு ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ரசிகர்கள் உற்சாகம்:
இதை இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்குகிறார். டேவிட் வார்னர் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வாழ்வின் தொடக்க காலத்தில் மிகவும் ஆக்ரோஷமான வீரராக உலா வந்தார்.
ஐபிஎல் தொடரில் விளையாடத் தொடங்கிய பிறகு மிக மிக நட்பான, நகைச்சுவை உணர்வு கொண்ட வார்னராக இந்திய ரசிகர்களிடம் திகழ்ந்து வருகிறார். இவருக்கு என்று இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாகுபலி, புஷ்பா கெட்டப்புகளில் நடித்த வீடியோக்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம் ஆகும். மேலும், இவரை புஷ்பா படத்தில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
38 வயதான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 37 அரைசதம், 26 சதங்களுடன் 8 ஆயிரத்து 786 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 3 இரட்டை சதங்கள் அடங்கும். 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 33 அரைசதம், 22 சதங்களுடன் 6 ஆயிரத்து 932 ரன்கள் எடுத்துள்ளார். 110 டி20 போட்டிகளில் ஆடி 28 அரைசதம், 1 சதத்துடன் 3 ஆயிரத்து 277 ரன்கள் எடுத்துள்ளார். 184 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 62 அரைசதங்கள், 4 சதத்துடன் 6 ஆயிரத்து 565 ரன்கள் எடுத்துள்ளார்.

