தாம்பரத்தில் இனி No டிராபிக்.. தென் மாவட்ட மக்களே கேட்டுக்குங்க.. இனி எல்லாம் கிளாம்பாக்கம் தான்..!
தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Kilambakkam Bus Stand: தென் மாவட்டத்திலிருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பக்கம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் Kilambakkam Bus Stand
சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்பொழுது பொதுமக்கள் வந்து சேர்வதற்கு, பேருந்து மற்றும் தங்களுடைய சொந்த வாகனத்தில் வருவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அருகே ரயில் நிலையங்கள் இல்லாததால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தவர்.
தாம்பரம் வரை செல்லும் பேருந்துகள்..
தென் மாவட்டத்திலிருந்து மற்றும் வட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தன. அதாவது சென்னை நோக்கி வரும்போது தாம்பரம் வரையும், கிளம்பும்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் சென்று வந்தன. இதன் காரணமாக பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறை பரிந்துரை
இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் மற்றும் தாம்பரம் போலீசார் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. இதனைத் தொடர்ந்து தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு குட்பாய் சொல்லும் விதமாக, தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது தென் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போக்குவரத்து துறை அறிக்கை என்ன?
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் 04/03/2025 செவ்வாய்க்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் பயணிகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல மாநகர பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

