IND vs AUS: மிரட்டல் பவுலிங்.. ஆனாலும் அசத்திய ஆஸ்திரேலியா! 265 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs AUS Champions Trophy 2025 Semi Final: சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

IND vs AUS Champions Trophy 2025 Semi Final: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. துபாயில் நடக்கும் இந்த அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன.
தொடங்கி வைத்த வருண்:
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடியது. ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இளம் வீரர் கூப்பரை 0 ரன்னில் பறிகொடுத்தது. இதன்பின்னர், ஸ்மித்துடன் சேர்ந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடத் தொடங்கினார். சுழலுக்கு சாதகமான மைதானம் என்பதால் அவர் தொடக்கத்திலே அடித்து ஆடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.
இதனால், 6வது ஓவரிலே கேப்டன் ரோகித் சர்மா சுழல்பந்துவீச்சாளர்களை அழைத்தார். இதற்கு உடனடி பலன் கிடைத்தது. நியூசிலாந்திற்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலே அபாயகரமான வீரர் டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கினார். அவர் பந்தில் அவர் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்களுடன் அவுட்டானார்.
சுழல் தாக்குதல்:
இதன்பின்னர், ஜோடி சேர்ந்த ஸ்மித்- லபுஷேனே ஜோடி நிதானமாக ஆடியது. மைதானம் நன்றாக சுழலுக்கு ஒத்துழைத்ததால் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி என மாறி, மாறி இந்திய பந்துவீச்சாளர்கள் வீசினர். லபுஷேனே 29 ரன்களில் ஜடேஜா சுழலில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜோஷ் இங்கிலிஷ் 11 ரன்னில் அவுட்டானார்.
ஸ்மித் அசத்தல்:
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸ்மித் அரைசதம் கடந்தார். அவருடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் ஆஸ்திரேலிய ரன் மீண்டும் ஏறியது. ஸ்மித் - கேரி ஜோடி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய நேரத்தில் ஸ்மித் அவுட்டானார். முகமது ஷமி பந்தில் அவர் 73 ரன்களில் போல்டானார்.
கேரி அசத்தல்:
இதன்பின்னர், அபாயகரமான பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அவர் அக்ஷர் படேல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்திலே போல்டானார். அடுத்து வந்த துவார்ஷியஸ் 19 ரன்னில் அவுட்டானார். ஆனாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்தார். அச்சுறுத்தலாக இருந்த அலெக்ஸ் கேரியை ஸ்ரேயஸ் ஐயர் அபாரமாக த்ரோ செய்து ரன் அவுட் செய்தார். அவர் 61 ரன்கள் எடுத்தார்.
வெற்றி பெறுமா இந்தியா?
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதனால், இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் நன்றாக வீசினர்.
மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியினர் திறம்பட இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆஸ்திரேலிய அணியில் ஜம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல், லபுஷேனே, ஸ்மித் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆவார்கள். இவர்களது பந்துவீச்சை இந்திய அணி சமாளித்து இலக்கை எட்டினால் முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.




















