Diwali 2024: களைகட்டும் தீபாவளி! சக்கைபோடு போடும் புத்தாடை, பட்டாசு விற்பனை - உற்சாகத்தில் தமிழ்நாடு
Diwali 2024: தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு நிகராக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தீபாவளி நன்னாளில் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது வழக்கமான ஒன்றாகும்.
புத்தாடை விற்பனை ஜோர்:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் செல்லத் தொடங்கியுள்ளனர். வெளியூர் செல்லும் பயணிகளுக்காக நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.
தீபாவளிக்காக பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் தி.நகர் ரங்கநாதன் வீதியில் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்து வருகின்றனர். தி.நகர் மட்டுமின்றி வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் மற்ற பகுதிகளிலும் கடைகளில் மக்கள் புது ஆடைகள் வாங்க குவிந்து வருகின்றனர்.
சலுகை விலையில் விற்பனை:
பிரபல தனியார் வணிக வளாகங்களிலும் புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் குவிந்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை, நெல்லை. சேலம் போன்ற முக்கிய நகரங்களிலும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் ஏராளமான புத்தாடைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புத்தாடைகள் மட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் வீட்டு உபயோக பொருட்களான மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி, குளிர்சாதன் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதனால், வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
பட்டாசு விற்பனை:
தீபாவளி என்றால் பட்டாசுகள் இல்லாமல் நிறைவு பெறாது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க அரசு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள் விதித்தாலும் பட்டாசுகள் வெடிப்பது மட்டும் வழக்கம்போல இருந்து வருகிறது. நாளை மறுநாள் தீபாவளி என்பதால் பட்டாசுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டாசு கடைகள் அரசின் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இணையவழி பட்டாசு விற்பனையே இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளிக்காக சென்று வரும் நிலையில், மறுபுறம் பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருவதால் தமிழ்நாடு முழுவதும் களைகட்டி காணப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.