State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: இதில் இருமொழிக் கொள்கை, 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது, உயர் படிப்புகளில் சேர பொதுத்தேர்வு மதிப்பெண்களே போதும் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வி துறைக்கான கொள்கை முடிவுகள் நாளை காலை வெளியாக உள்ளன நிலையில், இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறார்.
முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, ஓர் ஆண்டுக்கு முன்னதாக தனது அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறைக்கான கொள்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் நாளை (ஆகஸ்ட் 8ஆம் தேதி) காலை சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியிடுகிறார்.
இருமொழிக் கொள்கை
இதில் இருமொழிக் கொள்கை, 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது, உயர் படிப்புகளில் சேர பொதுத்தேர்வு மதிப்பெண்களே போதும் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல அறிவியல் கல்வி, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆங்கில அறிவுத் திறன்கள் சார்ந்த திறன் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாநில கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விழா நிரல் என்ன?
விழா வரவேற்புரையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆற்ற உள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினியை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். தொடர்ந்து மாணவர்களுடன் உரையாட உள்ளார்.
உடனடியாக அமலா?
மாநிலக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களில், உடனடியாக அமல்படுத்த வாய்ப்புகள் இருப்பதை அமல்படுத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






















