கடவுள் சிலை முதல் கருணாநிதி, ஜெயலலிதா சிலை வரை..... கரூரில் களைகட்டும் கொலு பொம்மை விற்பனை..!
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கடவுள் சிலை முதல் கருணாநிதி, எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி, ஜெயலலிதா வரை கரூரில் களைகட்டும் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் மரம், இரும்பினால் ஆன ரேக்குகளில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள்.
இதையொட்டி கரூர் நகரில் உள்ள கடைகளில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. குறிப்பாக கரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு தற்போது இருந்தே கொலு பொம்மை விற்பனை தொடங்கியுள்ளது. பெங்களூரில் இருந்து வர வைக்கப்பட்டுள்ள 100% களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடவுள் சிலைகள், கடோத்கஜன் செட், கல்யாண செட், திருவிளையாடல் செட், சொர்க்கவாசல் திறப்பு என்று பல்வேறு வகையான கொலு பொம்மைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
மேலும், காலத்திற்கு ஏற்றார் போல் கடவுள் சிலைகள் மட்டும் இன்றி கலைஞர் கருணாநிதி, எம் ஜி ஆர், இந்திரா காந்தி, ஜெயலலிதா ஆகிய அரசியல் தலைவர்கள் பாரதியார், காந்தி, வஉசி போன்ற தியாகிகள் பொம்மையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பொம்மைகள் இந்த வருடம் விற்பனைக்கு வந்துள்ளது.
பொம்மைகள் வாங்க வந்த தனியார் பள்ளி ஆசிரியை சாந்தி கூறும் போது:
வீட்டு தேவைக்கு மட்டும் இன்றி, பள்ளிக்கூடத்திலும் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கரூரில் ஒரே இடத்தில் அனைத்து விதமான பொம்மைகளும் கிடைப்பதால் ஆர்வத்துடன் வாங்க வந்துள்ளோம். இந்த பொம்மைகளை வைத்து பள்ளி குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய திருவிழாக்கள், புராண கதைகள் குறித்து எடுத்துரைக்கும் போது மாணவர்கள் ஆர்வத்துடன் உள்வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார்.