Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்
Hardik Pandya MI: மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எப்படி செயல்பட்டு இருக்கிறார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Hardik Pandya MI: மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தலைவனாக முன்னின்று செயல்படுவதில் தயக்கம் காட்டுவதாக ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாய்ப்பை இழந்த மும்பை:
ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கடந்த ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த மும்பை அணி , நடப்பு தொடரில் நான்காவது இடத்தை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வென்றாலும், இரண்டாவது குவாலிஃபையரில் தோல்வியுற்றதால் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை மும்பை இழந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அணியின் செயல்பாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், ஒரு கேப்டனாக அணியை வழிநடத்துவதில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா செயல்படும் விதம் தான் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் ஆல்-ரவுண்டர் ஹர்திக்
நடப்பாண்டு சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா, மொத்தமாக 224 ரன்களை சேர்த்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 ரன்களை சேர்த்தார். பந்துவீச்சாளராக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் ஒரே போட்டியில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச தரத்திலான ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, எதிர்பார்ப்புகளுக்கு நிகராக செயல்பட்டாரா? என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
சுயமாக முடிவு எடுப்பதில் தயக்கம்?
குஜராத் அணிக்கு கேப்டனாக களமிறங்கிய முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்று ஹர்திக் அசத்தினார். அடுத்த சீசனிலும் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதனை பார்த்தபோது அடடா, இவருக்குள் இப்படி ஒரு தலைமை பண்பா? என கருதியே மும்பை அணி ஹர்திக்கை மீண்டும் ஒப்பந்தம் செய்து அணியின் கேப்டனாகவும் நியமித்தது. ஆனால், வலுவான வீரர்கள் இருந்தும் ஹர்திக்கால் மும்பை அணியை திறம்பட வழிநடத்த முடியவில்லை. காரணம், குஜராத் அணியில் இருந்தபோது, ஒவ்வொரு சூழலிலும் எப்படி செயல்பட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்து, ஹர்திக்கின் வழிகாட்டியாக ஆஷிஷ் நெஹ்ரா செயல்பட்டார். அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகளை மட்டுமே ஹர்திக் செய்தார். ஆனால், மும்பை அணியில் அவரை அப்படி வழிநடத்த யாரும் இல்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப சுயமாக முடிவெடுக்கவே ஹர்திக் வலியுறுத்தப்படுகிறார். அப்படி எடுப்பதில் தான், ஹர்திக் இன்னும் பின் தங்கி உள்ளதாக அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.
காணாமல் போன-ஆல் ரவுண்டர்:
ஹர்திக் பாண்ட்யாவிற்கு இணையான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இல்லை என்பதே, தேசிய அணியில் அவருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது. ஆனால், நடப்பு தொடரில் அத்தகைய அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக ஹர்திக் செயபட்டதாக தெரியவில்லை என்பதே, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவுகள் காண்பிக்கின்றன. ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபி, டொ20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியபோது, இக்கட்டான சூழலில் கூட ஹர்திக் பாண்ட்யாவை நம்பி பந்துவீச வைத்தார். அதற்கான பலனையும் இந்தியா பெற்றது. ஆனால், கேப்டனாக இருந்தும் பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் நெருக்கடியான சூழலில் ஹர்திக் பந்துவீச முன்வரவில்லை. இதன் மூலம் தனது திறன் மீது அவருக்கே சந்தேகம் உள்ளதோ? என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஹர்திக் தலைவன் ஆவது எப்போது?
கேப்டன் பொறுப்பை அணி நிர்வாகம் வழங்கலாம் ஆனால், அணியின் தலைவர் ஆவது என்பது ஒருவரது செயல்பாட்டிலேயே உள்ளது. வாழ்வா? சாவா? என்ற சூழல் நிலவினால், சரி எனது அணிக்கானதை நானே செய்கிறேன் என முன்வருபவனே தலைவன். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான சூழலில், ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை விட அனுபவம் குறைந்த டாப்லேவை பந்துவீச பணித்தார். அந்த ஓவர் ஒட்டுமொத்த போட்டியையும் பஞ்சாப் பக்கமாக திருப்பிவிட்டது. ஒருவேளை தனது அனுபவத்தை பயன்படுத்தி, தாமாக முன்வந்து ஹர்திக் பந்து வீசியிருந்தால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் இருந்தது. காரணம் இந்த போட்டியில் 2 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் வீழ்த்தி, 19 ரன்களை மட்டுமே ஹர்திக் விட்டுக் கொடுத்து இருந்தார்.
இந்த பிரச்னைகளுக்கும் எல்லாம் தீர்வு கண்டு அதிலிருந்து மீண்டு வந்தால் மட்டுமே, எதிர்காலத்திலாவது அணியை சிறப்பாக ஒரு தலைவனாக வழிநடத்தி மும்பை அணியை சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்ற வைக்க முடியும்.




















