மீண்டும் மீண்டுமா? தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? அரசுப்பள்ளி காலியிடங்களை தற்காலிக நியமனங்கள் மூலம் நிரப்ப முடிவு!
Govt School Teacher Vacancy: ஆண்டுதோறும் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், நீண்ட கால விடுப்பில் சென்ற ஆசிரியர்களால் காலி இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் பணி இடங்களை, தற்காலிக நியமனங்கள் மூலம் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்குக் கற்பிக்க, 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அதிகரிக்கும் காலி இடங்கள் எண்ணிக்கை
எனினும் ஆண்டுதோறும் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், நீண்ட கால விடுப்பில் சென்ற ஆசிரியர்களால் காலி இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் அதிக அளவில் நடத்தப்படவில்லை. தற்காலிக ஆசிரியர்களைக்கொண்டே கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இடைநிலை தொடங்கி, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் இதுநாள் வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணி நியமனம் செய்துகொள்ள அனுமதி
அந்த வகையில் 2025- 26ஆம் கல்வியாண்டிலும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்துகொள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. எஸ்எம்சி எனப்படும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் கூறும்போது, ‘’ஆசிரியர் பதவி உயர்வு, நியமனம் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. வழக்குகள் முடிவுக்கு வந்ததும் காலிப் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
திமுக தேர்தல் வாக்குறுதி
எனினும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசுப் பணி காலி இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த உடன் 3.50 லட்சம் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் கூட நிரம்பவில்லை என்று எதிர்க் கட்சிகளும் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் தேர்வர்களும் கூறி வருகின்றனர்.






















