CBSE Supplementary Exam: தொடங்கிய முன்பதிவு; 10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
cbse supplementary exam 2025:

நாடு முழுவதும் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களின் பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முன்பதிவு ஜூன் 30ஆம் தேதி தொடங்கி உள்ளது. தேர்வர்கள், ஜூன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள், cbse.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்பினாலும் விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்களும் இந்தத் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாத மாணவர்கள், தனித் தேர்வர்கள் அனைவருக்கும் ஜூலை 15ஆம் தேதி முதல் 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
எத்தனை பாடங்களுக்கு?
10ஆம் வகுப்பு மாணவர்கள், 2 பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல இம்ப்ரூவ்மெண்ட் பிரிவில் பிளஸ் 2 மாணவர், ஒரு பாடத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் பள்ளிகள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில், 'Private Candidate Supplementary Examination 2025' பிரிவை க்ளிக் செய்ய வேண்டும்.
- தேவையான ஆவணங்களை உள்ளிட்டு, எந்தப் பாடத்துக்கான தேர்வை எழுத வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- பதிவிறக்கம் செய்து, வருங்காலப் பயன்பாட்டுக்காக சேமித்துக்கொள்ள வேண்டும்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மே 13 அன்று வெளியிட்டது. 2024- 25ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ல் தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றன. 16 லட்சத்து 92,794 பேர் தேர்வை எழுதிய நிலையில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 88.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/cbsenew/documents/LOC_Regular_2025_27052025.pdf






















