காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லையா? காவலரை தாக்கிய 3 போதை இளைஞர்கள் கைது
கைதானவர்களில் பிரமோத்ராஜ் என்பவரின் தந்தை வசந்தகுமார், பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். சிறப்பு எஸ்ஐ மகன் டாஸ்மாக் பாரில் எஸ்ஐயை தாக்கியதால் பரபரப்பு.

சேலம் மாநகர் ஐந்து ரோடு அமராவதி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியிருக்கும் பாரில் நேற்று மாலை 5.30 மணியளவில் குடிபோதையில் வாலிபர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அழகாபுரம் காவல் நிலையத்திற்கு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவலர்களுக்கும் தகவல் கொடுத்து, டாஸ்மாக் பாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில், ரோந்து வாகனத்தில் சிறப்பு எஸ்ஐக்கள் ராஜேந்திரன், சரவண குமார் ஆகியோர் சென்றனர். ஐந்து ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த அழகாபுரம் எஸ்ஐ சேகரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு குடி போதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்களை விலக்கி விட்டு, விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, குடி போதையில் இருந்த 3 வாலிபர்கள், எங்களிடம் விசாரணை நடத்த நீங்கள் யார் எனக் கேட்டு எஸ்ஐ சேகரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் திடீரென எஸ்ஐ சேகரை கீழே தள்ளிவிட்டு, சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சேகர், மயக்க நிலைக்கு சென்றார். உடனே அவரை உடனிருந்த போலீசார் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்ஐயை தாக்கிய மூன்று வாலிபர்களையும் மற்ற போலீசார் பிடித்தனர். அவர்களை அழகாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரமோத்ராஜ் (27), தாரமங்கலம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த நரேன் (27), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தோப்பனம்பாலத்தை சேர்ந்த சதீஷ் (27) என தெரியவந்தது.
இந்த 3 பேரிடமும் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். கைதானவர்களில் பிரமோத்ராஜ் என்பவரின் தந்தை வசந்தகுமார், பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். சிறப்பு எஸ்ஐ மகனாக இருந்து கொண்டு, டாஸ்மாக் பாரில் தகராறு செய்து, விசாரிக்க வந்த போலீஸ் எஸ்ஐயை தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

