Car Sales May 2025: மாஸ் காட்டிய மஹிந்திரா, மீண்டும் செம்ம அடி வாங்கிய டாடா - மே விற்பனையில் அசத்திய கார்கள்
Car Sales Report May 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மே மாதம் விற்பனையில் அசத்திய கார் நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Car Sales Report May 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மே மாதம் விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
மே மாத கார் விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதுப்புது வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பதிவான வாகன விற்பனை தொடர்பாக உற்பத்தி நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் மஹிந்திரா நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மற்ற நிறுவனங்களின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவன விற்பனை விவரம்:
கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் 17 சதவிகித கூடுதல் விற்பனையை மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதன்படி, உள்ளூர் சந்தை மற்றும் வெளிசந்தைகளுக்கு ஏற்றுமதி என மொத்தம், 84 ஆயிரத்து 110 வாகனங்களை கடந்த மாதம் அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பயணிகள் வாகன பிரிவில் மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம், 52 ஆயிரத்து 431 எஸ்யுவிக்கள் விற்பனையாகியுள்ளன. நிறுவனத்தின் மொத்த விற்பனை 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. BE 6, XEV 9e, XUV 3XO, ஸ்கார்ப்பியோ N மற்றும் தார் ஆகிய கார் மாடல்கள், மஹிந்திராவின் விற்பனையை வெகுவாக ஊக்குவித்துள்ளன. இதனால், டாடா மோட்டார்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது முறையாக மஹிந்திரா முதலிடத்தை பிடித்துள்ளது.
டாடா நிறுவன விற்பனை விவரம்:
உள்ளூர் மற்றும் வெளியூர் ஏற்றுமதி என அனைத்தையும் சேர்த்து, கடந்த மாதத்தில் டாடா நிறுவனம் 70 ஆயிரத்து 187 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகயில் நிறுவனத்தின் விற்பனை 9 சதவிகிதம் சரிந்துள்ளது. குறிப்பாக அந்நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் கடுமையாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சார வாகனங்கள் உட்பட 42 ஆயிரத்து 40 பயணிகள் வாகனங்களை கடந்த மாதம் டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனிடையே, கடந்த மாதம் 5 ஆயிரத்து 685 மின்சார வாகனங்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுபோக வெளிநாட்டு ஏற்றுமதியிலும் டாடா நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளது.
டொயோட்டா விற்பனை விவரம்:
கடந்த ஓராண்டை போலவே டொயோட்டா நிறுவன விற்பனை தொடர்ந்து வலுவாக உள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தின் வாகன விற்பனை மே மாதத்தில் 22 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது ஆயிரத்து 584 யூனிட்கள் ஏற்றுமதி உட்ப்ட 30 ஆயிரத்து 864 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தின் எம்பிவி, எஸ்யுவி மற்றும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பால் விற்பனை அதிகரித்துள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 25 ஆயிரத்து 273 யூனிட்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
JSW MG மோட்டார் இந்தியா
இந்த பட்டியலில் மிக அதிகபட்சமாக எம்ஜி நிறுவனம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த மே மாதம் 40 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 4 ஆயிரத்து 510 வாகனங்களை விற்ற எம்ஜி நிறுவனம் கடந்த மாதம் 6 ஆயிரத்து 304 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. விண்ட்சர் மற்றும் விண்ட்சர் ப்ரோ கார்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் முன்னணி மின்சார வாகன நிறுவனமாக எம்ஜி உருவெடுத்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கியா இந்தியா:
கியா நிறுவனம் 22 ஆயிரத்து 315 வாகனங்களை விற்பனை செய்து கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் 14.43 சதவிகிதம் கூடுதல் விற்பனையை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனம் சார்பில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததே, விற்பனை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. இதே உற்சாகத்தில் முற்றிலும் புதிய மாடல் கார் ஒன்றை வரும் ஜுலை மாதத்தில் சந்தைப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் மாருதி
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் 3.16 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 77 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 690 யுனிட்களை விற்பனை செய்து 5.45 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை வணிக வாகனங்களையும் உள்ளடக்கியது ஆகும்.





















