Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ரஷ்யா மீது உக்ரைனால் நேற்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், ஆபரேஷன் ‘Spider's Web‘ என்ற பெயரில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் அதன் நீண்ட தூர செயல்பாடாக, நேற்று ரஷ்யாவில் உள்ள 5 விமானத் தளங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்தது. இது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், ஆபரேஷன் ‘Spider's Web‘ என்று பெயரிட்டு அந்த தாக்குதலை உக்ரைன் எப்படி நடத்தியது என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்குள் நீண்ட தூரம் ஊடுருவி தாக்கிய உக்ரைன்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வரும் நிலையில், தற்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் மிக முக்கிய செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டது. அதன்படி, “ரஷ்யாவின் எல்லைக்குள் மிக ஆழமாக புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி, 41 போர் விமானங்களை சேதப்படுத்தினோம். போர் தொடங்கியதில் இருந்து அதிக சேதத்தை ஏற்படுத்திய உக்ரைனின் ட்ரோன் தாக்குதலாக இது இருக்கும்” அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தாக்கப்பட்ட ரஷ்யாவின் 5 விமான தளங்கள்
உக்ரைன் பாதுகாப்பு அமைப்பால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் 5 ராணுவ விமான தளங்கள் அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டுள்ளன. இதில், உக்ரைன் மீது நீண்ட தூர ஏவுகணைகளை ஏவ மாஸ்கோ பயன்படுத்திய Tu-95 மற்றும் Tu-22 போன்ற குண்டுவீச்சு விமானங்கள், A-50 ராடார் மற்றும் கட்டளை விமானம் ஆகியவை தாக்கப்பட்டவற்றில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் ஆபரேஷன் ‘Spider's Web‘
உக்ரைனிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், ஆபரேஷன் ‘Spider's Web‘ என்ற பெயரில், உக்ரைனால் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்காக ஒன்றரை வருடங்கள் திட்டமிடப்பட்டதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரில், உக்ரைன் பாதுகாப்புப் படையின் புத்திசாலித்தனமான இந்த நீண்ட தூர நடவடிக்கையை அவர் பாராட்டியுள்ளார். இந்த பிரமாண்ட தாக்குதலுக்காக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை திட்டமிடப்பட்ட நிலைகளில் இருந்த கப்பலில் இருந்து ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கக்கூடிய விமானங்களில் 34 சதவீத விமானங்களை அழித்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரேன்கள், மரத்தாலான மேற்கூரைகளைக் கொண்ட ட்ரக்குகளில் வைக்கப்பட்டு, முன்கூட்டியே ரஷ்யாவிற்குள் ரகசியமாக, ரஷ்ய விமானப்படைத் தளங்களுக்கு அருகே எடுத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது, ரிமோட் மூலம் மர மேற்கூரைகள் திறக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே தகவலை ரஷ்யாவும் உறுதிப்படுததியுள்ளது. அதாவது, ட்ரோன்கள் உக்ரைனிலிருந்து ஏவப்படவில்லை என்றும், விமானப்படை தளங்களுக்கு அருகில் இருந்துதான் ஏவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏனென்றால், இர்குஸ்க் பகுதியில் உள்ள பெலாயா விமானப்படைத் தளம், உக்ரைனிலிருந்து 4,300 கிலோ மீட்டர் தூரமும், முர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ஒலென்யா விமானப்படைத் தளம் உக்ரைனிலிருந்து 2,000 கிலோ மீட்டர் தூரமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களை, சரியான நேரத்தில் ரஷ்யாவிலிருந்து மீட்டுக் கொண்டுவந்துவிட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் போரில், உக்ரைன் இந்த அளவிற்கு பிரமாண்டமான தாக்குதலை ரஷ்யா மீது நடத்தியிருப்பது, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.





















