Maxwell: உலகமே போற்றிய பேட்டிங்.. மறக்க முடியுமா மேக்ஸ்வெல்லின் அந்த இரட்டை சதத்தை.. நினைத்து பார்ப்போமா?
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு என்று தவிர்க்க முடியாத இடம் உண்டு. சர்வதேச கிரிக்கெட்டையே அவர்கள் கட்டியாள்வதற்கு அவர்கள் தரமான வீரர்களை உருவாக்கியதே காரணம் ஆகும். அப்படி ஆஸ்திரேலியா உலகிற்கு தந்த அதியற்புதமான கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்.
மறக்க முடியாத இரட்டை சதம்:
மேக்ஸ்வெல் இன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். களத்தில் சில நிமிடங்கள் நின்றுவிட்டாலே ஒட்டுமொத்த ஆட்டத்தையும் ஆஸ்திரேலிய வசம் கொண்டு செல்லும் திறன் கொண்டவர் மேக்ஸ்வெல். அப்படிப்பட்ட மேக்ஸ்வெல் ஆடிய மறக்க முடியாத ஒரு ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அவர் விளாசிய இரட்டை சதம்.
அந்த போட்டியில் அன்று என்ன நடந்தது? என்பதை கீழே மீண்டும் ஒரு முறை காணலாம். கடந்த 2023ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா போன்ற தரமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு 291 ரன்களை குவித்தது. ஜட்ரான் மட்டும் 129 ரன்களை விளாசினார்.
91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள்:
292 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆப்கான் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தந்தனர். முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷீத்கான், நூர் அகமது, முகமது நபி என அடுத்தடுத்து பந்துவீச்சு தாக்குதல் நடத்தினர். டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாக, அதிரடி காட்டிய மார்ஷ் 24 ரன்னில் அவுட்டாக, டேவிட் வார்னர் 18 ரன்னில் அவுட்டானார். இங்கிலிசும் டக் அவுட்டாக 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியாவிற்காக மேக்ஸ்வெல் களமிறங்கினார்.
ஆப்கானிஸ்தான் அணி ஸ்டோய்னிஸ், ஸ்டார்க் என அனைவரையும் அவுட்டாக்கி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டனர். அப்போது, ஒரு முனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல் 33 ரன்களில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சை முஜிப் உர் ரஹ்மான் தவறவிட்டார். ஆனால், அந்த ஒற்றை கேட்ச்சை விட்டதன் தண்டனையை மிக மோசமாக ஆப்கானிஸ்தானுக்கு மேக்ஸ்வெல் அளித்தார்.
கட்டுக்குள் கொண்டு வந்த மேக்ஸ்வெல்:
மறுமுனையில் கேப்டன் கம்மின்சை வைத்துக்கொண்டு மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் அந்த போட்டியை நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த யாரும் சாகும் வரை மறக்கவே மாட்டார்கள். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் பின்னர் தனது அதிரடியை மெல்ல மெல்ல காட்டத் தொடங்கினார். பவுண்டரியும், சிக்ஸரும் மாறி, மாறி பறக்கத்தொடங்கியது. எப்படியும் ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என்றே பலரும் நினைத்தனர்.
ஆனால், மேக்ஸ்வெல் ஆட்டத்தை மெல்ல மெல்ல கையில் எடுத்தார். முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷீத்கான், நூர் அகமது, முகமது நபி என்று ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சையும் அவர் சிதைத்தார். கேப்டன் கம்மின்ஸ் எதிரில் நின்று மேக்ஸ்வெல் பேட்டிங்கை வேடிக்கை மட்டுமே பார்த்தார். அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல் 76 பந்துகளில் சதம் விளாசினார்.
ருத்ரதாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல்:
அதன்பின்பு, மேக்ஸ்வெல்லை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசித் தள்ளினார். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல்லிற்கு திடீரென காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவரால் ஓட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கால் முழுவதும் பிடித்துக்கொண்ட நிலையில் அவர் தொடர்ந்து ஆட மாட்டார் என்றே ஆப்கானிஸ்தான் அணியும், ரசிகர்களும் நினைத்தனர். அப்படி நடந்தால் வெற்றியை பறித்துவிடலாம் என்று கருதினர்.
ஆடம் ஜம்பாவும் களமிறங்க தயாராக இருந்தார். ஆனால், அதன்பின்பு மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் என்பது இந்த நூற்றாண்டிற்கே புகழ்பாடும் அளவிற்கு ஒரு ஆகச்சிறந்த இன்னிங்ஸ். வெறும் ஒரு காலை மட்டும் நகர்த்திக் கொண்டு மேக்ஸ்வெல் பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசினார். அவரது அதிரடியை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 104 பந்துகளில் மேக்ஸ்வெல் 150 ரன்களை கடந்தார். அப்போதுமே 241 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்திருந்தது.
201 ரன்கள்:
மிக அலட்சியமாக குழந்தைகளை பந்துவீசவைத்து சிக்ஸரும், பவுண்டரியும் விளாசுவது போல மேக்ஸ்வெல் அடித்தார். ஒருகட்டத்தில் அவருக்கு இன்னொரு காலையும் நகர்த்த முடியவில்லை. வெறும் கைகளை மட்டுமே பயன்படுத்தி பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். இதனால், ஆட்டம் முழுவதும் ஆஸ்திரேலியா வசம் வந்தது.
கடைசியில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் விளாசி தனது இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்து ஆஸ்திரேலியாவையும் வெற்றி பெற வைத்தார். கம்மின்ஸ் 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருக்க, மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் 201 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மறக்க முடியாத போட்டி:
அந்த போட்டி தன்னம்பிக்கையுடன் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இப்படி ஒரு அசாத்தியமான இன்னிங்ஸ் அதிசயமாகவே கிரிக்கெட்டில் ஆடப்படும் இன்னிங்ஸ் ஆகும். அதுவும் போட்டியின் இடையில் தசைப்பிடிப்பால் உடல் நடுங்க மேக்ஸ்வெல் மைதானத்தில் படுத்த காட்சி ரசிகர்களையே மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனாலும், அவர் விட்டுக்கொடுக்காமல் பேட்டிங் செய்து வெற்றி பெற வைத்தார்.
36 வயதான மேக்ஸ்வெல் 2012ம் ஆண்டு முதன்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவே ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றைத் தொடங்கினார். கடைசியாக இந்திய அணிக்கு எதிராகவே ஒருநாள் போட்டியில் ஆடினார். மேக்ஸ்வெல் ஓய்வு பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















