IPL 2025 RCB vs MI: பயம் காட்டிய பாண்ட்யா.. கடைசியில் காப்பாற்றிய குருணல்! ஆர்சிபி த்ரில் வெற்றி
IPL 2025 RCB vs MI: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குருணல் பாண்ட்யா கடைசி ஓவரை சிறப்பாக வீச ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் படிதார், கோலி , ஜிதேஷ் ஷர்மாவின் அதிரடியால் ஆர்சிபி 222 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்தது.
ஆரம்பத்தில் கட்டுப்படுத்திய ஆர்சிபி:
இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா 17 ரன்களில் அதிரடியாக ஆடி அவுட்டாக ரிக்கெல்டன் 10 பந்துகளில் 17 ரன்களில் அவுட்டாக வில் ஜேக்ஸ் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடி காட்ட முயற்சித்தனர். ஆனால், புவனேஷ்வர், யஷ் தயாள், ஹேசில்வுட் கட்டுக்கோப்பாக வீசினர்.
பட்டாசாய் வெடித்த திலக் - பாண்ட்யா:
ஆனால், சூர்யகுமார் யாதவ் 28 ரன்களில் அவுட்டாக அடுத்து ஹர்திக் பாண்ட்யா - திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து பட்டாசாய் வெடித்தனர். சுயாஷ் சர்மா வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில் திலக் வர்மா அதிரடி காட்ட, அடுத்து ஹேசில்வுட் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினார். ஹர்திக் பாண்ட்யா சிக்ஸராக விளாசினார். குருணல் பாண்ட்யா வீசிய 15வது ஓவரிலும் ஹர்திக் அதிரடி காட்ட மும்பையின் வெற்றிக்கு கடைசி 24 பந்துகளில் 55 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
திலக் அரைசதம்:
இதனால், ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமானது. பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு என்பதால் ரஜத் படிதார் மீண்டும் யஷ் தயாளை அழைத்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
திலக், பாண்ட்யா அடுத்தடுத்து அவுட்:
மும்பையின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவரில் திலக் வர்மா அவுட்டானார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களில் அவுட்டானார். கடைசி 12 பந்துகளில் 28 ரன்கள் மும்பைக்கு தேவைப்பட்டது.
ஆனால், ஹேசில்வுட் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி 6 பந்துகளில் 20 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது.
குருணல் பாண்ட்யா அபாரம்:
கடைசி ஓவரை குருணல் பாண்ட்யா வீசினார். முதல் பந்திலே சான்ட்னர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலும் தீபக் சாஹர் சிக்ஸர் அடிக்க முயற்சித்ததை சால்ட் அபாரமாக பிடித்து டிம் டேவிட்டிடம் தூக்கிப் போட அவர் கேட்ச் பிடித்தார்.
கடைசி 3 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் நமன்தீர் பவுண்டரி அடிக்க கடைசி 2 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 5வது பந்தில் அவர் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க அந்த பந்தை யஷ் தயாள் கேட்ச் பிடித்தார். இதனால், 1 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்ட ஆர்சிபி வெற்றி உறுதியானது. கடைசி பந்தையும் அவர் டாட் ஆக வீச ஆர்சிபி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குருணல் பாண்டயா முதல் 3 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய நிலையில், கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ஆர்சிபியை வெற்றி பெறச் செய்தார்.