Theni: போடி அருகே கால் டாக்ஸியில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வங்கிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம் போடி அருகே கோடாங்கிபட்டியில் வாடகை கால் டாக்ஸியில் கொண்டுவரப்பட்ட 20 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படை அதிகாரிகள் மூலம் கைப்பற்றபட்டது.
வாகன சோதனை :
தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் வங்கியில் ஏடிஎம் கொண்டு செல்வதாக கொண்டுவரப்பட்ட நிலையில் ஆவணங்களில் இருந்த குளறுபடி காரணமாக தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு போடிநாயக்கனூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு தேனி மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பணம் பறிமுதல் :
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கோடாங்கிபட்டி அருகே இன்று தேனி மாவட்ட தேர்தல் கண்காணிப்பு பறக்கும் அணியினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தேனியில் இருந்து அரசு அங்கீகாரம் பெற்ற சவுத் இந்தியன் வங்கியில் இருந்து போடியில் உள்ள வங்கிக் கிளைக்கு ரூபாய் 20 லட்சம் தனியார் வாடகை வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. கோடங்கிபட்டி அருகே ஆய்வு செய்த தேர்தல் பறக்கும் படையினர் கொண்டுவரப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆவணங்களில் குளறுபடி இருந்ததால் சரிவர ஸ்கேன் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் வங்கி பணியாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆவணங்களின்றி பணம் :
இதனால் கைப்பற்றப்பட்ட பணம் ரூபாய் 20 லட்சம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. வாகனத்தில் உள்ள பதிவு இன்னும் ஆவணங்களில் உள்ள விவரங்களும் முரண்பட்டு இருந்த நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமான தேனி மாவட்ட வருமான வரித்துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். வருமான வரித்துறையினரின் ஒப்புதலின்படி கைப்பற்றப்பட்ட பணம் ரூபாய் 20 லட்சம் போடிநாயக்கனூரில் உள்ள சார்நிலைக் கருவூலத்தில் காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டு அங்கு பணம் உள்ள பெட்டியுடன் சீல் வைக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வங்கிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வரும் நான்கு நாட்கள் அரசு வங்கிகள் விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம்மில் வைக்கப்படுவதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஆவணங்களில் உள்ள குளறுபடிகள் காரணமாக பணம் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.