Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate Fee: தஞ்சமை மானம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடியில் வரும் ஜுன் 12ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanjavur Toll Gate Fee: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என மக்கள் கோரி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சுங்கச் சாவடியை திறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானம்பாடி சுங்கச்சாவடி - கட்டண விவரங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் மானம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடியில் வரும் 12ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் - சேத்தியாதோப்பு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடியில், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க 105 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோக,
- மினி பஸ், இலகுரக வணிக வாகனங்கள், இலகு சரக்கு வாகனம் - ரூ.170
- பேருந்து மற்றும் ட்ரக் (2 ஆக்சல்) - ரூ.360
- 3 ஆக்சில் வணிக வாகனங்கள் - ரூ.390
- கனரக வாகனங்கள் - ரூ.560
- ஒவர்சைஸ்ட் வாகனங்கள் - ரூ.685 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் - சோழபுரம் 4 வழிச்சாலை:
தஞ்சை - கும்பகோணம் - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளும் மோசமாக இருந்ததால் தஞ்சையிலிருந்து - கும்பகோணத்திற்கு இடைபட்ட 50 கி.மீ. தூரத்தை கடக்க 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆனது. இதனை கருத்தில் கொண்டு தஞ்சையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
மூன்று கட்டங்களாக நடந்த பணிகள்:
அதன்படி, தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையில் 4 வழி சாலைகள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டன. இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விக்கிரவாண்டி -சேத்தியாத்தோப்பு வரை ஒரு பிரிவாகவும், சேத்தியாதோப்பில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 2 -வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சை மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலை வரை 3 -வது பிரிவாகவும் பணிகள் நடைபெற்று அண்மையில் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த சாலையில் மொத்தம் இரண்டு சுங்கச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதில் ஒன்றாக தான், மானம்பாடி சுங்கச்சாவடியில் வரும் 12ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
தமிழக மக்கள் அதிர்ச்சி:
தமிழ்நாட்டின் ஊடே பரந்து விரிந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 73 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பல காலாவதியாகிவிட்டதால் அவற்றை நீக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சுங்கச்சாவடிகளுக்கு காலாவதி என்பதே கிடையாது என மத்திய அரசு தரப்பு குறிப்பிடுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி தமிழ்நாட்டில் பல போராட்டங்களும் அவ்வப்போது வெடிக்கின்றன. இந்நிலையில் மானம்பாடியில் புதியதாக ஒரு சுங்கச்சாவடி திறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு, தஞ்சாவூர் - கும்பகோணம் - சோழபுரம் சாலை மேம்ப்பாட்டு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், சுங்கச்சாவடி அமைத்து கொள்ளை கட்டணம் வசூலிப்பது மக்களின் மீது மேலும் நிதிச்சுமையை அதிகரிக்கும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.





















