நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வருகை தரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பாமகவில் தந்தை மகனுக்கும் இடையே வார்த்தை போர் முற்றிய நிலையில், கடந்த 5ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து பேசினார். அவர் சந்தித்து சென்ற சில மணி நேரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குருமூர்த்தி நட்பு ரீதியிலான சந்திப்பு என தெரிவித்தார். மேலும் அன்புமணி தைலாபுரம் வந்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
முன்னதாக நடந்த பாமக கூட்டத்தில் பேசிய ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அன்புமணியும் மருமகள் செளமியாவும் தான் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார். அதன் பின்னர், அனுபவம் இல்லாத அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும் இன்னும் தலைமைப்பண்பு வரவில்லை என்றும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார். ஒரு பக்கம் ராமதாஸின் ஆதரவாளர்கள் தனித்து விடப்படுவதாக செய்திகள் வெளியாகின. மற்றொரு பக்கம் நான்தான் கட்சியின் தலைவர் நான் சொல்வதைத் தான் கட்சி நிர்வாகிகள் கேட்க வேண்டும் என அன்புமணி சூளுரைத்தார். ஒரு கட்சிக்குள் பதவிக்காக தொண்டர்கள் அல்லது நிர்வாகிகள் சண்டை போடுவதை பார்திருப்போம். ஆனால், அப்பாவும் மகனும் அரசியலில் ஆடுபுலி ஆட்டம் ஆடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது எதற்காக என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
எனக்கு பல்வலி
இந்நிலையில், குருமூர்த்தி சந்திப்புக்கு பிறகு இன்று சென்னை புறப்பட்ட ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அமித்ஷா இன்று மதுரை வருகிறார். முன்பு அவர் சென்னை வந்தபோது அதிமுக கூட்டணி உறுதியானது. அதேபோன்று இன்று பாமக - பாஜக கூட்டணி உருவாகுமா என கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ் அப்படி எதுவும் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. நான் யாரையும் சந்திப்பதற்காக சென்னை வரவில்லை எனக்கு பல்வலி; பல் மருத்துவரை சந்திக்க செல்கிறேன் என தெரிவித்தார். மேலும் அன்புமணியை சந்திக்க போகிறீர்களா என்ற கேள்விக்கும் மெளனமாக இருந்த ராமதாஸ் அதற்காக வரவில்லை என்றார்.
பாமக - பாஜக கூட்டணி?
பின்னர் குருமூர்த்தி உடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, பேசிக்கொண்டிருக்கிறார்கள். குருமூர்த்தியை மிகவும் மதிக்கிறேன். அவருடன் நீண்ட கால நட்பு இருக்கிறது. அதேபோன்று சைதை துரைசாமியுடன் 30 ஆண்டு கால நட்பு இருக்கிறது என தெரிவித்தார். பாஜக - பாமக கூட்டணி பற்றி பேச மறுத்த ராமதாஸ், பாஜகவிற்காக சென்னை வரவில்லை என இன்று காலை தெரிவித்தார். இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும். கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் முகூந்தன் குறித்த கேள்விக்கு அது முடிந்த விவகாரம். முடிந்ததை பற்றி பேசி பயனில்லை என ராமதாஸ் தெரிவித்தார். இதன் மூலம் பாஜக கூட்டணியில் பாமக உறுதி என ராமதாஸ் ஹின்ட் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாமக தலைவர் அன்புமணி?
அன்புமணி ராமதாஸ் மீண்டும் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார். கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. அதுகுறித்து பேசி முடிவு எடுத்த பின்னரே அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.





















