ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
அதிமுக-வின் வேட்பாளராக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருவது அதிமுக-வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தேர்தலில் போட்டியிட்டவர் ஆற்றல் அசோக்குமார். கோவையில் செயல்பட்டு வரும் பிரபலமான தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குனரான இவர் மீது தற்போது அடுத்தடுத்து மோசடி புகார்கள் பதிவாகி வருகிறது.
ஆற்றல் அசோக்குமார் மீதான புகார் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? அவர் யார்? போன்ற தகவல்களை கீழே விரிவாக காணலாம்.
அம்பலமானது எப்படி?
கோவை மொடக்குறிச்சியில் பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தவர் ஆற்றல் அசோக்குமார். அவர் மீது பல்வேறு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் பள்ளியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அந்த பள்ளியின் நடவடிக்கைகளில் இருந்து அவரிடம் இருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன், சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த சூழலில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பிற்காக பள்ளிக்கட்டணம் செலுத்த பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் சென்றுள்ளது. அந்த மின்னஞ்சலில் உள்ள வங்கிக்கணக்கிற்கு கட்டணத்தை செலுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, 3 ஆயிரம் பெற்றோர்கள் மொத்தமாக ரூபாய் 40 கோடி கட்டணத்தை வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வங்கிக்கணக்கில் சந்தேகம் அடைந்த சில பெற்றோர்கள் பள்ளியைத் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போதுதான் இந்த வங்கிக்கணக்கு போலி என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்தியன் பப்ளிக் ஸ்கூல் எக்ஸலன்ஸ் என்ற அந்த வங்கிக்கணக்கு ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இதனால், பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்தடுத்து புகார்கள்:
இதையடுத்து, உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிவசங்கரன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். பின்னர், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், சதித்திட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் ஆற்றல் அசோக்குமார், கில்பர்ட் ஜேம்ஸ் லூர்துராஜ், கார்த்திகேயன் துரைசாமி, சொக்கலிங்கம், விஜயகுமார், பிரபாகரன் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆற்றல் அசோக்குமார் பள்ளியின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது பள்ளிக்கு வாங்கிய பேருந்துகளில் அசல் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதில் மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆற்றல் அசோக்குமார் மீது 336 ( 3), 340 (2) 316 (2) ஆகிய பிரிவுகளில் கோவை காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், கடந்தாண்டு இறுதியில் ஆற்றல் அசோக்குமார் பள்ளியின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது அந்த பள்ளியில் பணியாற்றிய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சோனாலி கீத்தை மிரட்டிய புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் அவர் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை அதிமுக-வில் ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ஆற்றல் அசோக்குமார்?
ஆற்றல் அசாேக்குமாரின் அம்மா செளந்திரம் கடந்த 1991ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆற்றல் அசோக்குமார் கல்வியை முடித்த பிறகு அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார்.
பின்னர், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். பின்னர், தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கும் சரஸ்வதியின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். தனது மாமியாருடன் இணைந்து பா.ஜ.க.வில் பணியாற்றிய அவர் தன்னையும், தனது ஆற்றல் அறக்கட்டளையும் முன்னிலைப்படுத்திக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.
சொத்து மதிப்பு
அதிமுக வேட்பாளராக கடந்த மக்களவைத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட ஆற்றல் அசோக்குமார் தனது பெயரில் ரூபாய் 583 கோடிக்கு அசையும், அசையா சொத்துக்களும, தனது மனைவி பெயரில் ரூபாய் 69 கோடி அசையும், அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது அப்போது பெரும் பேசுபொருளானது.





















