பொங்கல் பண்டிகை; பழனி உழவர் சந்தையில் இரு நாட்களில் 110 டன் காய்கறிகள் விற்பனை
சாதாரண நாட்களில் சுமார் 10 டன் முதல் 15 டன் வரை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனையாகிறது. தற்போது பழனி உழவர் சந்தையில் இரு நாட்களில் 110 டன் காய்கறிகள் விற்பனையானது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகளால் அதிக அளவு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 80% சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டே பூர்த்தி செய்து வருகிறது.
பொங்கல் பண்டிகை எதிரொலியால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து ஏற்றுமதியான காய்கறிகள் வழக்கத்திற்கு விட அதிமகாக ஏற்றுமதியானது. குறிப்பாக பழனி சண்முகபுரத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கத்தரி, வெண்டை, அவரை, மொச்சை போன்ற காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அது மட்டுமல்லாது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் சுமார் 10 டன் முதல் 15 டன் வரை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனையாகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
இந்நிலையில் போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை என தொடர்ந்து பண்டிகை காரணமாக கடந்த இரு நாட்களில் 110 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளது. சாதாரண நாட்களில் சுமார் இரண்டாயிரம் பேர் வந்து செல்லும் நிலையில் விழா நாட்களில் 3,500 பேர் உழவர் சந்தைக்கு வந்துள்ளதாக உழவர் சந்தை நிர்வாகத்தின் சாபாக கூறப்படுகிறது. மேலும் பண்டிகை தினம் என்பதால் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மொச்சை கிலோ 120 ரூபாய்க்கும் வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. குறைந்தபட்சமாக தக்காளி கிலோ 10 ரூபாய்க்கும், மல்லி கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதே போல தமிழக, கேரள எல்லை மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காய்கறி சந்தையான உழவர் சந்தை மற்றும் வார சந்தையில் வழக்கத்துக்கு மாறாக காய்கறிகள் விற்பனை அதிகரித்தது. கேரளாவை சேர்ந்த மக்கள் அதிகளவில் கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. பொங்கல் பண்டிகை எதிரொலியாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை அதிகரித்ததும் ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் கடந்த 2 தினங்களில் மட்டும் சுமார் 300 டன்னுக்கு மேலாக காய்கறிகள் விற்பனையானதும் அதே நேரத்தில் சென்ற வாரத்தை காட்டிலும் காய்கறிகள் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.