Ramadoss Vs Anbumani: “என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
மகன் அன்புமணிக்கு எதிராக அதிரடி காட்டிவரும் ராமதாஸ், தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். அப்படியானால், அன்புமணியின் நிலை என்ன.?

தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், எல்லா அதிகாரமும் தனக்கு தான் என்றும், தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் சீட் கிடைக்கும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதிய மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாமகவில் இருக்கும் அன்புமணியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, அந்த இடங்களில் புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார் ராமதாஸ்.
அதன்படி, இதுவரை 78 புதிய மாவட்ட செயலாளர்களையும், 61 புதிய மாவட்ட தலைவர்களையும் ராமதாஸ் நியமித்துள்ளார். இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அதோடு, புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப் பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, பாமக இணை பொதுச் செயலாளராக, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை ராமதாஸ் நியமித்தார்.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தத அவர், எம்எல்ஏ அருள் எப்போதும் தன்னுடைனேயே இருப்பார் என தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில், பாமக மகளிர் மாநாடு நடப்பதாக தெரிவித்த அவர், அதை வெற்றிகரமாக நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
“என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் சீட்“
மேலும், பாமக எந்த கூட்டணியில் போட்டியிடும் என்பது குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்றும், தன்னுடன் இருக்கும் நிர்வாகிகள் தான் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும், அவர்களுக்குத் தான் சீட் வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
“நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி“
தொடர்ந்து பேசிய ராமதாஸ், பாமகவில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தனக்கே உண்டு என உறுதிபட தெரிவித்தார்.
பாமகவின் கூட்டணி குறித்து பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறு கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார்.
அன்புமணியின் நிலை என்ன.?
ஒருபுறம் ராமதாஸ் இப்படி அதிரடி காட்டிவரும் நிலையில், அன்புமணி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில், தன்னுடன் இருப்பவர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அவர் கூறிவிட்டதால், அன்புமணி ராமதாசுடன் இணைவாரா, அல்லது கட்சியை பிளவுபடுத்தி, தனியாக ஏதும் கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு பக்கம், முக்கிய கட்சிகள் எல்லாம் கூட்டணிகளை கிட்டத்தட்ட இறுதி செய்துவரும் நிலையில், தேர்தலுக்கான காலம் குறைந்துகொண்டே வருவதால், விரைவில் இதற்கான முடிவு தெரியும் என எதிர்பார்க்கலாம்.




















