50 வயதை எட்டிய சூர்யா..வாழ்த்து சொல்ல வீட்டில் குவிந்த ரசிகர்கள்..வைரல் வீடியோ
நடிகர் சூர்யாவின் 50 ஆவது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல ஏராளமான ரசிகர்கள் அவர் வீட்டில் முன் குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

சூர்யா பிறந்தநாள்
நடிகர் சூர்யா இன்று தனது 50 வயதை எட்டியுள்ளார்.1997 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரித்த நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் சூர்யா. படித்துமுடித்து கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த சூர்யா தனது அம்மா வாங்கிய 25 ஆயிரம் கடனை திருப்பி கொடுக்கவே நடிக்க வந்ததாகவும் மற்றபடி தனக்கு நடிப்பில் எந்த வித ஈடுபாடும் இருந்ததில்லை என்றும் ஒருமுறை கூறினார். ஆனால் முதல் படத்தில் இருந்தே ரசிகர்கள் அவருக்கு பெரியளவில் வறவேற்பு கொடுத்தார்கள்.
ரொமான்ஸ் டூ ஆக்ஷன்
ஆரம்பத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற ரொமாண்டி ரோல்களில் நடித்துவந்த சூர்யாவின் கரியரில் பாலா இயக்கிய நந்தா மற்றும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே போன்ற படங்கள் அவரது இமேஜை முற்றிலுமாக மாற்றின. இதன்பிறகு வந்த கெளதம் மேனனின் காக்க காக்க சூர்யாவை ஒரு ஸ்டைலிஷான நடிகராகவும் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது . அடுத்தடுத்து பிதாமகன், கஜினி , ஆறு , அயன் , ஆதவன் என நடிப்பில் புது முயற்சிகளை செய்துகொண்டே வந்தது சூர்யாவுக்கு என இன்று பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.
அகரம்
நல்ல நடிகர் என்பதோடு சூர்யா நல்ல மனிதாபியாகவும் நல்ல சமூக செயற்பாட்டாளராகவும் அடையாளம் காணப்படுகிறார் சூர்யா. தான் நிறுவிய அகரம் அறக்கட்டளையின் வாயிலாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆயிரக்கணக்காக மாணவர்களின் கல்விக்கு உதவி இயக்கியிருக்கிறார்.
ஜெய் பீம்
சூர்யாவின் கரியரில் அவருக்கு அதிக பாராட்டுக்களைப் பெற்றுத் தந்த படம் என ஜெய் பீம் படத்தை சொல்லலாம். ஜெய் பீம் படத்திற்கு பின் சூர்யாவின் மீது திட்டமிட்ட விமர்சனங்கள் தொடர்ச்சியாக பரப்பப்படுகின்றன. அண்மை காலங்களில் சூர்யாவின் அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக அவரது படங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஆனால் சூர்யா ரசிகர்களின் ஆதரவு என்றும் அவருக்கு இருந்துகொண்டே வருகிறது. தோல்விகளுக்குப் பின்னும் தொடர்ச்சியாக மீண்டும் எழுந்து ஓடுபவராக சூர்யா இருந்து வருகிறார்.
சூர்யா வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்
இன்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரண்டுள்ளார். அவர்களை சூர்யா சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Crazy crowd at his house 🔥#Karuppu #HappyBirthdaySuriya pic.twitter.com/3Na7FyH894
— Naveen (@NaveenSuriya_FC) July 23, 2025




















